பதிவு செய்த நாள்
18
ஆக
2018
01:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டை, வரலாற்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி, அகசிப்பள்ளி பஞ்., கனகமுட்லு அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறமுள்ள வயலில், உடைந்த மூன்று கல்வெட்டு துண்டுகளை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இக்குழுவுடன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இது குறித்து, காப்பாட்சியர் கூறியதாவது: இந்த கல்வெட்டு, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. விஜயநகர் காலத்தில், கனக்க முட்டல் என்ற பெயரில், இந்த ஊரை அமைத்த செய்தியை, கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வூரே தற்போது, கனகமுட்லு என்று மருவி அழைக்கப்படுகிறது. பையூர் பற்று என்ற வார்த்தை, காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல்லில், 650 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளதால், அதன் தொடர்ச்சியாக வந்த படை தளபதியின் வெற்றிகளை குறிக்கிறது. இக்கல்வெட்டு உடைந்துள்ளதாலும், சில பகுதிகள் கிடைக்காததாலும், தகவலை முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.