பதிவு செய்த நாள்
18
ஆக
2018
05:08
சாத்தூர்: சாத்தூரில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் உள்ளது வன்னிவிநாயகர் கோயில். 400 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சாத்தூர் - கன்னியாகுமரி நெஞ்சலைச்சாலையில் அமைந்துள்ளது. இங்கு வழிப்பட்டால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். மாதம் தோறும் வரும் சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தை முதல் நாள், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பக்தர்கள் அலைஅலையாக வந்து தரிசனம் செய்வர்.
முன்பு இக்கோயில் வழியாக கன்னியாகுமரி, கோவில்பட்டி, நாகர்கோவில், மார்த்தாண்டம், மதுரை, திருச்சி என பல்வேறு ஊர்களுக்கு செல்லும் விரைவு பஸ் முதல், டவுன் பஸ்களில் செல்லும் பக்தர்கள், பஸ்சில் இருந்த படியே வணங்கி காணிக்கை செலுத்துவர். தற்போது நான்கு வழிச்சாலைக்காக பாதை மாற்றப்பட்டதால் வரம் வேண்டி இத்திருத்தலத்திற்கு நேரில் வந்து தரிசனம் செய்கின்றனர். வன்னிமரத்தினை மேற்கூரையாக கொண்டு வீற்றிருக்கும் வன்னிவிநாயகரை வணங்கி செல்பவர்களுக்கு காரியத்தில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி மேல் வெற்றிக்கிட்டும்.
திருமணத் தடைகள் நீங்கும், வியாபாரம் செழிக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், நவகிரகதோஷம் நீங்கி வளம் பெருகி, நலம் உண்டாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் விழாக்காலங்கள் தவிர காலை 6:00 மணி - மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி - இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும். கோயில் பணியாளர் ராமகிருஷ்ணன், “புராண காலத்தில் பாண்டவர்கள் தாங்கள் போர்புரியும் ஆயுதங்களை வன்னிமரத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து வைத்து வளமும், நலமும் தருபவராக கருணை மழை பொழிபவராக வன்னிவிநாயகர் வீற்றிருக்கிறார். அவரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபட்டால் நன்மை எல்லாம் கிடைக்கும், ” என்றார். தொடர்புக்கு 04562 284 633.