பதிவு செய்த நாள்
20
ஆக
2018
12:08
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை மலையில் உள்ள துருவாசர் கோவிலுக்கு செல்ல, படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் உள்ள மலைக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து, 1,500 அடி உயரத்தில் உள்ளது. ஜெகதேவிராயர் காலம் முதல், ஆங்கிலேயர் காலம் வரை, கோட்டை பயன்பாட்டில் இருந்தது. மலைக்கோட்டையின் நடுவில், புகழ் பெற்ற துருவாசர் கோவில் உள்ளது. மலை மீதுள்ள கோவிலுக்கு செல்லும் வழித்தடம் முழுவதும் சேதமானதால், படிக்கட்டுகள் அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ராயக்கோட்டை மலை அடிவாரத்தில் இருந்து, கோவில் வரை, 3,000 சதுர அடிக்கு படிக்கட்டுகளும், 1,800 சதுர அடிக்கு தரைத்தளமும் அமைக்கும் பணியை தொல்லியல் துறையினர் துவக்கி உள்ளனர். பணிகள் அனைத்தும் துரிதமாக நடப்பதால், சில மாதங்களில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.