மெக்கா நகர மக்களிடம் பல போதனைகளை செய்து புகழ் பெற்றார் நபிகள் நாயகம். மக்களும் அவரது போதனைகளை தவறாமல் பின்பற்றினர். இதை பொறுக்க முடியாத எதிரிகள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அவரது வீட்டருகில் மறைந்து நின்று அவர் வெளியே வரும் போது கொல்ல முடிவு செய்தனர். ஒருநாள் இரவு... எதிரிகள் இருளில் மறைந்திருந்தனர். இந்த விஷயம் எப்படியோ நாயகத்தின் காதுகளை எட்டியது. அவரும் சாமர்த்தியமாக எதிரிகள் கண்ணில் படாமல் தப்பித்தார். தனது நண்பர் அபூபக்கருடன் மெக்கா நகரை விட்டே வெளியேறினார். ’தவுர்’ என்னும் மலைக்குகைக்குள் இருவரும் ஒளிந்தனர்.
தப்பிச் சென்றதை அறிந்த எதிரிகள் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியவர்கள், எதேச்சையாக குகையை நோக்கி வந்தனர். குகைக்குள் இருந்து எதிரிகளை கவனித்த அபூபக்கர் “நாம் இருப்பதை எப்படியோ தெரிந்து குகையை நோக்கி வருகிறார்கள். நம்மை அவர்கள் கொல்வது உறுதி” என்றார். நபிகளார் அவரிடம், “தோழரே! பயப்பட வேண்டாம். நம்மை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். அபூபக்கர் ஆச்சரியமுடன், “எப்படி அவ்வளவு நம்பிக்கையாய் சொல்கிறீர்கள்?” என கேட்டார். புன்னகைத்த நாயகம், “நம்முடன் குகையில் இன்னொருவரும் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்”
“நாம் இருவர் மட்டும் தானே இருக்கிறோம். நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?” என்றார் அபூபக்கர். “எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கிறான். எனவே அச்சம் என்ற சொல்லுக்கு அவசியமில்லை” என்றார் நாயகம்.
இதற்குள் எதிரிகள் குகையை நெருங்கி விட்டனர். குகை வாசலில் சிலந்தி வலை படர்ந்திருந்தது. அதை பார்த்த ஒருவன், “யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஆள் நடமாட்டம் இருந்தால் குகைக்குள் நுழையும் போதே சிலந்தியின் வலை அறுபட்டிருக்கும். எனவே வேறு இடத்தில் தேடலாம்” என்று சொல்லவே அனைவரும் வந்த வழியில் திரும்பினர். இறைவனை நினைத்தால் தான் யாருக்கும் நல்வாழ்வு அமையும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமோ!