ஞானவாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மனுஷ்ய பிறவி ஒன்றுக்குத் தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிராணி வர்க்கங்களில் மனுஷன் ஒருத்தன் தான் தன்னையே பரபிரம்மமாக (கடவுளாக) தெரிந்து கொள்கிற ஞானத்திற்கு முயலமுடியும். அதனால் தான் ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று சொன்னது. ஞானத்தை அடைவதற்கு நாம் பிரயத்தனம் பண்ணவேண்டும். இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சம் கூடச் சரியில்லை.
நாம் எத்தனை பி.ஏ., எம்.ஏ., படித்திருந்தாலும், டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் ‘அசடு’ என்று தான் அர்த்தம். படிப்பது, சம்பாதிப்பது, குடும்பம் நடத்துவது முதலான எல்லாவற்றுக்கும் ‘டயம்’ இருக்கிறது. ஞானத்தை அடையும் முயற்சிக்கு மட்டும் ‘டயம்’ இல்லை என்பது, “குப்பை செத்தையை எல்லாம் சேர்த்து மூட்டி எரிப்பதற்கு ‘டயம்’ இருந்தது. ஆனால் குளிர் காய ‘டயம்’ இல்லை என்கிற மாதிரி உள்ளது. “வேலை செய்ய பொழுது இருந்தது. கூலி வாங்கப் பொழுது இல்லை!” என்று சொல்வது போலத் தான் இந்த விஷயம். பொய்யான மனசைப் போக்கிக் கொண்டு மெய்யான ஆத்ம சொரூபமாவதற்கு முயற்சி வேண்டும். மனம் இருந்தால் ஞானவாசல் திறக்க நிச்சயம் வழி உண்டு.