பதிவு செய்த நாள்
24
ஆக
2018
11:08
பழநி : பழநி மாரியம்மன்கோவிலில் நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. பழநி முருகன் கோவிலைச் சார்ந்த, கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில், திருக்கல்யாணம், தேரோட்டம் நடக்கிறது.
இக்கோவிலுக்கு தனித்தேர் இல்லாததால், பெரிய நாயகியம்மன் கோவில் தேர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், 18 லட்சம் ரூபாய் செலவில் மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி, மூன்று ஆண்டுகளாக நடந்தது. இந்தப் புதிய தேரின் வெள்ளோட்ட விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல் கணபதி பூஜை, யாக பூஜைகள் நடந்தன. நேற்று புதுத்தேரில் மாரியம்மனின் மகாசக்தி கும்பகலசம் திருத்தேரேற்றம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் நான்கு ரத வீதியில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. தேரை செய்த ஸ்தபதி நாகர்கோவில் நாகமுத்து கூறியதாவது: இலுப்பை, வாகை மரங்களை கொண்டு, 26 டன் எடையில், 32.75 அடி உயரம், 14 அடி நீள சிம்மாசனம், 150 சுவாமி சிற்பங்களுடன் ராஜசூத்திரம் முறைப்படி தேர்வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.