கருமத்தம்பட்டி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கருமத்தம்பட்டி, சோமனுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சுமங்கலி பூஜை வெகு விமரிசையாக நடந்தது.கருமத்தம்பட்டி மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் நேற்று வரலட்சுமி பூஜை மற்றும் திருமஞ்சனம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். பின், அன்னதானம் நடந்தது. சூலுார் அருகே உள்ள செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். செங்கத்துறை அங்காளம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டனர். சுமங்கலிகள் புதிய தாலிக்கொடியில் மாங்கல்யம் அணிந்து வழிபட்டனர்.முத்துக்கவுண்டன் புதுார் அங்காளபரமேஸ்வரி கோவிலிலும் சுமங்கலி பூஜை, சிறப்பு ஆராதனை, வழிபாடுகள், அம்மன் அலங்காரம், உச்சிக்கால பூஜைகள் நடந்தன.