பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
ஈரோடு: வரலட்சுமி நோன்பு விழாவையொட்டி, கோவில்களில் குவிந்த பெண்கள், நோன்பு கயிறு கட்டி விரதமிருந்தனர். சகல சவுபாக்கியங்களையும் தரும், செல்வங்களுக்கு அதிபதியான மஹாலட்சமி அருளை பெற வேண்டி செய்யப்படும் முக்கிய விரதம், வரலட்சுமி விரதமாகும். ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை, மஹாலட்சுமி அவதார நாள், துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்நாளில் விரதமிருந்து, மஹாலட்சுமியை வணங்கினால் செல்வ செழிப்புடன், குடும்பம் இருக்குமென்பது நம்பிக்கை. இந்நாளான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கமலவல்லி தாயார் சன்னதியில், உற்சவர் மஹாலட்சுமி விழா மண்டபத்தில் எழுந்தருளினார். தாம்பாளத்தில் அரிசி பரப்பி, கலசம் வைத்து, பழம் பாக்கு வெற்றிலை வைத்து, கற்பூர ஆரத்தி காட்டி, ஸ்லோகங்களை பாடி, நோன்பு கயிறு கட்டி பெண்கள் வழிபட்டனர். தீபாராதனையை தொடர்ந்து விரதம் முடித்தனர். அதைத் தொடர்ந்து திருகல்யாண உற்சவம் நடந்தது. அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் அருள் பாலித்தார். விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு, தேங்காய், பழம், பூ, குங்குமம் வளையல், பிரசாதம் கொடுக்கப்பட்டது.
* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், பிளேக்மாரியம்மன், காமாட்சியம்மன், கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, பூஜை செய்து தீபாராதனை நடந்தது. பொன்னம்பாளையம், கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஊத்துக்குளியம்மன், சவுடேஸ்வரியம்மன், ஆதிபராசக்தியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சுமங்கலி பூஜை நடந்து. இதில் பங்கேற்ற பெண்கள், புது தாலிக்கயிறு அணிந்தனர்.