பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள, சக்கரத்தாழ்வார் பஜனை கோவிலில், சக்கரத்தாழ்வார் சிலை மற்றும் பூஜை பொருட்கள் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்ன காஞ்சிபுரம், பங்காரம்மன் தெருவில் விஸ்வகர்மா சமூகத்திற்கு சொந்தமான, சக்கரத்தாழ்வார் பஜனை கோவில் உள்ளது. இந்த கோவில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது; தினமும் வழிபாடு நடக்கும். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் பூஜை முடிந்த பின், கோவிலை பூட்டி சென்று உள்ளனர். நேற்று காலை, 10:00 மணிக்கு அத்தெருவை சேர்ந்த அற்புதலிங்கம் என்பவர் கோவிலை திறந்துள்ளார்.
வெளி கேட் மூடப்பட்டு இருந்தது. உள் பகுதியில் கம்பி கேட் பூட்டு, அதன் பின் உள்ள மரக்கதவு பூட்டையும் உடைத்து, உள்ளே சென்ற நபர்கள், சக்கரத்தாழ்வார் சிலையை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், கோவிலில் பூஜைக்காக வைத்திருந்த பஞ்ச பாத்திரங்கள், சடாரி, பித்தளை குடம், பெரிய வெண்கல மணி போன்றவையும் திருடியுள்ளனர். சக்கரத்தாழ்வார் சிலை அருகே, துர்க்கை அம்மன், தாயார், பிரம்மங்கார் ஆகிய பித்தளை சிலைகள் உள்ளன. அவை கனமானதாக இருப்பதால், விட்டு சென்றிருக்கலாம் என, கூறப்படுகிறது. தகவல் அறிந்த, விஷ்ணு காஞ்சி போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில் பின்புறம் சுற்று சுவரில் ஏறி குதித்து, திருடர்கள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.