பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, சென்னை நகரில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில், பிராமணர்கள் பூணுால் புதுப்பித்துக் கொண்டு, தமது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.ஆவணி அவிட்டம் எனும் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர், ஆடி அல்லது ஆவணி மாதங்களில், அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடு. இது, சமஸ்கிருதத்தில், உபாகர்மா என்றழைக்கப்படுகிறது. துவங்குதல் என்பது இதன் பொருள்.இந்த நாள், வேதங்களை படிக்க துவங்குவதற்கு நல்ல நாள் என கருதப்படுகிறது. முதல் ஆறு மாதங்கள் வேதங்களும், அடுத்த ஆறு மாதத்திற்கு வேதத்திற்கான அர்த்தமும் படிக்கப்படுகிறது.ஆவணி அவிட்டத்தை ரிக், யஜுர் வேதிகள் கொண்டாடுகின்றனர். சாம வேதிகள், விநாயகர் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். ஆவணி அவிட்டத்தில், பூணுாலைப் புதுப்பிப்பதோடு, வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர். தந்தை இல்லாதவர்கள், தங்கள் மூதாதையருக்கு, எள்ளும், அரிசியும் நீரில் கொடுத்து, தர்ப்பணம் செய்வர்.நேற்று, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், ஆழ்வார்பேட்டை பகுதிகளில் உள்ள வைணவ, சைவ மடங்கள், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், நங்கநல்லுார் ஹயக்கிரீவர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அங்கு, பிராமணர்கள் தங்கள் பூணுாலை புதுப்பித்து, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
- நமது நிருபர்-