பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
தலைவாசல்: தலைவாசல் அருகே மழை வேண்டி, கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர். தலைவாசல் சுற்றுவட்டார கிராமங்களில், மழை பெய்யாததால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளம், குட்டைகள், நீரின்றி வறண்டுள்ளன. மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. வேப்பநத்தம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆடிப்பட்டத்தில் விதை நடவு செய்ய, நிலத்தை உழுது, விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆவணி மாதமே தொடங்கி விட்ட நிலையில், மழை பெய்யாததால், நடவுப்பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில், கிராம மக்கள் கூடி, மழை பொழிய, கொடும்பாவி எரித்து வழிபாடு செய்ய முடிவெடுத்தனர். நேற்று மதியம், பாஞ்சாலியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து, சோமகாசுரன் மனைவியின் உருவ கொடும்பாவி தயார் செய்யப்பட்டது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக கொண்டு சென்றதுடன், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். அதன் பின்னர், ஊர் எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, அதற்கு தீ வைத்து எரித்தனர். கொடும்பாவியை எரித்த ஒரு சில நிமிடங்களிலேயே, மழை பெய்ததால், கிராம மக்கள் பரவசம் அடைந்தனர்.
வழிபாடு குறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில், மழையின்றி எப்போதெல்லாம் வறட்சி ஏற்படுகிறதோ, இது போன்று கொடும்பாவி எரித்து வழிபடுவோம். சோமகாசுரன் இருக்கிமிடத்தில், மழை பெய்யாது என்ற சாபம் உள்ளது. அதனால் அவனை விரட்ட, அவனது மனைவியை எரித்தால், அவன் ஊரை விட்டு விலகுவான் என்றும், மழை பெய்யும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.