பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
ஊட்டி: ஊட்டியில் நடந்த ஆடிப்பூர விழாவில், செவ்வாடை பக்தர்களின் ஊர்வலத்தில் நகர வீதிகள் களை கட்டின.நீலகிரி மாவட்ட மேல் மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், ஆடிப்பூர பெருவிழா நேற்று ஊட்டியில் நடந்தது. ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பாறை முனீஸ்வரர் கோவிலில், குத்துவிளக்கேற்றி கஞ்சி கலய ஊர்வலம் துவங்கியது.ஊர்வலத்தில், நீலகிரியில் நிறைந்த செல்வம், கல்வி, நீராதாரம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்து பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. செவ்வாடை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கஞ்சி கலயம், முளைப்பாரி, தீச்சட்டிகளை ஏந்தி வந்ததுடன், ஓம் சக்தி... ஆதி பராசக்தி என்ற கோஷம் எழுப்பியவாறு, மெயின் பஜார், கமர்சியல் சாலை வழியாக ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை சென்றடைந்தனர்; அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, நீலகிரி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க, ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றம் என, பல்வேறு அமைப்பினர் செய்திருந்தனர்.