பதிவு செய்த நாள்
28
ஆக
2018
03:08
வீரபாண்டி: காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று நடந்த பால்குடம், தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆட்டையாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாகணபதி, காளியம்மன், சப்த கன்னிமார் மற்றும் கருப்பனார் கோவில் கும்பாபி ஷேக விழா நேற்று காலை, கணபதி யாகத்துடன் துவங்கியது. மாலையில், பவானி கூடுதுறையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் குடங்களை, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, காளியம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி சிலைகளுக்கு அபி ஷேகம் செய்தனர். இன்று மாலை, புதிய சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. நாளை காலை, 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.