பதிவு செய்த நாள்
01
பிப்
2012
10:02
காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் இன்று தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா, ஜன., 29ம் தேதி இரவு வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ம் தேதி இரவு 7 மணிக்கு வீரகாளியம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று இரவு 9 மணிக்கு வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவும், கிராமசாந்தியும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல், பகல் 11 மணிக்கு விநாயகர் வழிபாடு, கொடியேற்றம் நடக்கிறது. பகல் 1 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து ஸ்வாமி அடிவாரம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருள்கிறார். இரவு 7 மணிக்கு மண்டப கட்டளை நடக்கிறது. நாளை முதல், 6ம் தேதி வரை காலை 9 மணிக்கு காலசந்தி நடக்கிறது. 6ம் தேதி காலை, 10 மணிக்கு தக்கார் கொங்கு மண்டல சஷ்டி அன்னதான மண்டபம் மற்றும் கோவில் பணியாளர்கள் சார்பில், மைசூர் பல்லக்கில் ஸ்வாமி திருமலை உலா வருதல் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மாலை 3க்கு மண்டப கட்டளை, இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 9 மணிக்கு மண்டப கட்டளை நடக்கிறது.ஃபிப்., 7ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மஹாபிஷேகம், மாலை 6 மணிக்கு மகர புஷ்ப நல்லோரையில் ஸ்வாமி ரதத்துக்கு எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். 9ம் தேதி தேர் நிலையம் அடைகிறது. திருக்கோவிலில் பிப்., 8ம் தேதி முதல், 16ம் தேதி வரை தொடர்ந்து தினமும் காலை 9 மணிக்கு காலசந்தி நடக்கிறது. 12ம் தேதி, பகல் 11 மணிக்கு தெப்போற்சவ விழா நடக்கிறது. 13ம் தேதி பகல் 12 மணிக்கு மஹா தரிசனம், 14ம் தேதி பகல் 12க்கு தீர்த்தவாரி, 16ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் ஸ்வாமி திருமலைக்கு எளுந்தருளலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் நடராஜன், உதவி ஆணையர் பழனிக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.