பதிவு செய்த நாள்
29
ஆக
2018
12:08
சேலம்: கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சேலம், அம்மாபேட்டை, செங்குந்த சுப்ரமணியர் கோவில், கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. அதை முன்னிட்டு, கடந்த, 26 முதல், சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை, கஜ, அஷ்வ, கோ பூஜைக்கு பின், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட பெண்கள், குடங்களை சுமந்து, காந்தி மைதானத்திலிருந்து, ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். மாலை, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை, மூன்றாம் கால பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:35 மணிக்கு, கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம், திருக்கல்யாணம் நடக்கிறது.
* ஓமலூர், தும்பிப்பாடி, பெரியநாகலூரில், புதிதாக கட்டப்பட்ட நாகபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, நேற்று, கணபதி பூஜையுடன், யாக வேள்வி தொடங்கியது. பின், பெரியநாகலூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, மேள, தாளம் முழங்க, தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஆட்டையாம்பட்டி, கணபதி, காளியம்மன், சப்த கன்னிமார், கருப்பனார் கோவில் கும்பாபி ஷேக விழா, கணபதி யாகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, லலிதா சகஸ்ர நாமம் பாராயணத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. மாலை, புதிய சிலைகளை வாகனத்தில் வைத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு, கண் திறப்பு நிகழ்ச்சி, பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை முடிந்து, புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலம் வந்து, கோபுர கலசங்களுக்கு ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பர்.