புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடுத்த நிலையப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரலெட்சுமி அம்மன் கோவில் உள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த ஓரியகுல மக்களின் குலதெய்வமாக அருள்பாலித்துவரும் இக்கோவிலில் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து நிதியுதவி பெற்று கடந்த ஒருவருடமாக திருப்பணிகள் நடந்தது. பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகியது. மூன்றுகால பூஜைக்கு பின்னர் புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம்வந்த பின்னர் ஸ்ரீ வீரலெட்சுமி அம்மன் மற்றும் குள்ளியம்மன், ராக்காச்சி அம்மன் கோவில் மூலஸ்தான கோபுர கசலங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை நிலையப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.