பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீகளஞ்சிய லெஷ்மி, ஸ்ரீமதன கோபால் பெருமாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் பிப்., 6ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிப்., நான்காம் தேதி காலை எட்டு மணிக்கு காவிரியிலிருந்து தீர்த்தும் எடுத்து வரப்படும். மாலை நாலரை மணிக்கு ஆசார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது. ஐந்தாம் தேதியும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து ஆறாம் தேதி காலை டாக்டர் ஸ்ரீ சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள் குணசேகர பட்டாச்சாரியார், ஸ்ரீ காந்த் பட்டாச்சாரியார் ஆகியோர் ஸர்வசாதகம் செய்து கும்பாபிஷேகம் நடக்கிறது. தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ முன்னிலை வகிக்கிறார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் யோகீஸ்வரன், அசோகன், செயல்அலுவலர் அரவிந்தன் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவில் தெரு, காசுக்கடை, அய்யங்கடைத்தெரு, காமராஜ் மார்க்கெட், தஞ்சை நகர அனைத்து வர்த்த சங்கங்கள் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்கின்றனர்.