பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
நாமக்கல்: நாமக்கல் என்.புதுக்கோட்டை அடுத்த ஒஸக்கோட்டையில், சவுடேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சக்திவேல் முருகன் கோவில் கும்பாபிஷே விழா, சவுடேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழா (தொட்டு அப்ப திருவிழா) கோலாகலமாக நடந்தது. கடந்த 27ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கும்பாலங்காரம், பிம்பசுத்தி, கோபுர கலச ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு, கலசங்கள் புறப்பாடும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது. தொடர்ந்து சக்தி அழைப்பு, வீரகுமாரர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது. அதில், சேலம், கருங்கல்பட்டி, நாமக்கல், சிங்களாந்தபுரம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வீரகுமாரர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நாமக்கல்லில் இருந்து என்.புதுக்கோட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.