பதிவு செய்த நாள்
31
ஆக
2018
12:08
காஞ்சிபுரம்:விநாயகர் சிலை வைப்பதற்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று, பிரச்னை இல்லாத இடத்தில் சிலைகள் வைக்க வேண்டும் என, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழா, அடுத்த மாதம், 13ல் நடக்கிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள், வழிபாட்டிற்காக வைப்பது வழக்கம். சிலைகள் வைப்பதற்கு, அரசு விதிமுறைகள் அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் குறித்து, பொதுமக்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி விளக்கினார்.
டி.எஸ்.பி., பாலசுப்பிரமணி கூறியதாவது:விநாயகர் சிலை வைப்பதில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது; அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிறர் இடத்தில் சிலை வைத்தால் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். பந்தல், தகர ஷீட்டில் அமைக்க வேண்டும்; தீத்தடுப்பு சாதனம் வைக்க வேண்டும். மேலும், சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சிலை அமைப்பாளர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக இருக்க வேண்டும். சிலைகள் ஐந்து நாளில் கரைக்க வேண்டும். அதற்கு, லாரி, மினி லாரி, டிராக்டர் மட்டும் பயன்படுத்த வேண்டும். பிற மதத்தினர் வழிபாட்டு தலங்கள் வழியாக, ஊர்வலம் செல்ல கூடாது. சிலைகள் கரைக்க மாவட்டத்தில், காஞ்சிபுரம் பொன்னேரி, மதுராந்தகம் ஏரி, சதுரங்கப்பட்டிணம், மாமல்லபுரம், நீலாங்கரை உட்பட, 12 இடங்களில் மட்டும் சிலைகள் கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், ஆய்வாளர்கள், பழனி, வெற்றிச்செல்வன், பிரபாகர், திருநாவுகரசு பங்கேற்றனர். மாமல்லபுரத்திலும் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்பற்றப்பட வேண்டிய விதி முறைகள் குறித்து, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், விவரித்தார்.