சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் படித்துறையில் அசுத்த துணிகளால் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2018 12:08
திருப்புல்லாணி: ராமநாதபுரம் அருகே சேதுக்கரை சேதுபந்தன ஆஞ்சநேயர் கோயில் கடற்கரை படித்துறையில் அசுத்த துணிகளால்,பக்தர்கள் வேதனை யடைந்து வருகின்றனர். புண்ணிய தலமான இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பதை விட சேதுக்கரையில் திதி கொடுப்பது விசேஷமானது, என பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் முன்னோர்களை வழங்கி கடலில் புனித நீராடுகின்றனர். அவர்களின் பழைய துணிகளை கடல் பகுதியில் விட்டு,விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக படித்துறை யில் ஏராளமான துணிகள் குவிந்து கிடக்கின்றன. அடுத்தடுத்து பக்தர்கள் இந்தப்பகுதிக்கு வரும் போதுகடற்கரை நீரை புனிதமாக எடுத்து தங்கள் தலைகளில் தெளித்து செல்கின்றனர்.
அங்கு பக்தர்கள் விட்டுச் சென்ற பழைய துணிகளை பார்த்து மன வேதனையடைகின்றனர். புனிதமான கடற்கரைப்பகுதி சுத்தம் செய்யாமல் அசுத்தமாக உள்ளதால் கடற்கரைப்பகுதியில் இறங்குவதற்கு பல முறை யோசிக்கும் நிலை உள்ளது. வேறு வழியின்றி கடற்கரையில் உள்ள படித்துறையில் இறங்கி புனித நீராடி வருகின்றனர். உடை மாற்றும் அறைகள் மோசமான நிலையில் கழிவுகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பக்தர்கள் உள்ளே நுழைய முடியாத நிலை உள்ளது. பெண்கள் திறந்த வெளியில் உடை மாற்றும் அவல நிலை உள்ளது. பக்தர்கள் தங்க பழமையான சேதமடைந்த மண்டபம் உள்ளது. இதை குப்பை தொட்டியாக பயன்படுத்தி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் குப்பை, முள் புதர்மண்டிய பழமையான மண்டபத்தில் தங்குவதை தவிர வேறு வழியில்லாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் படித்துறை, உடை மாற்றும் அறை, பக்தர்கள் தங்கும் மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும்.