பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ராஜகோபுர பணிக்காக, நூற்றாண்டு பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கல் தூண்கள் இடித்து அகற்றப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. பழங்கால புராதன சின்னங்களை அகற்றாமல் ராஜகோபுர பணியை மேற்கொள்ள பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலை கோவிலில் 800 ஆண்டு பழமையான கற்கோவில் சிற்பங்கள், சமனர்கால குகைகள், பிரமாண்ட ராஜகோபுரம், பண்டைகாலத்து கல்வெட்டுகள், கல் தூண்கள் மற்றும் பல்வேறு காலக்கட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்ட புரதாண நினைவு சின்னங்கள் காணப்படுகிறது. இக்கோவில் 12ம் நூற்றாண்டில் ஹொய்சாளர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதேபோல், ராஜகோபுரம், கல் தூண்கள், சிலைகள் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடந்த மன்னர் காலத்து கல்வெட்டுகளும் இந்த கோவிலில் உள்ளன. தமிழகம் மட்டுமில்லாது கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநில பக்தர்கள் தினசரி வந்து வழிப்பட்டு செல்கின்றனர். இக்கோவிலில் கடந்த சில ஆண்டுக்கு முன் ராஜகோபுரம் சேதமடைந்து ஆங்காங்கே தூண்கள் விரிசல் விட்டது. கடந்த சில மாதம் முன், விரிசல் விட்ட தூண்கள் பராமரிக்கப்பட்டன. அதனால், பக்தர்கள் ராஜகோபுரத்தை புதுப்பிக்க வலியுறுத்தினர். ராஜகோபுரத்தை புதுப்பிப்பதை விட கோவில் வளாகத்தில் புதிய ராஜகோபுரம் கட்ட கடந்த இரு ஆண்டுக்கு முன் அறங்காவலர் குழு தலைவர் வரதராஜன் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உள்ளூர் முக்கிய வி.ஐ.பி., கள் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி தற்போது டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பில் ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கி நடக்கிறது. ராஜகோபுரம் கட்ட கோவிலின் முதல் நூழைவு வாயிலில் கிருஷ்ணதேவராயர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய கலை வேலைபாடுகளுடன் கூடிய அலங்கார கல் தூண்கள், சிலைகள் இடிக்கப்பட்டு வருகிறது. தொல்லியர் துறை மற்றும் ஹிந்துஅறநிலையத்துறை ஆகமவிதிமுறைகள் படியும் பழங்கால கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளும்போது, வரலாற்று பதிவுகளை கொண்ட புரதாண கல் தூண்கள், சிலைகள் மற்றும் சின்னங்களை இடிக்காமல் புதிய கோபுரங்கள், கட்டிடங்கள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பழங்கால கல் தூண்கள் இடித்து அப்புறப்படுத்தப்படுவதால், உள்ளூரை சேர்ந்த பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: ராஜகோபுர திருப்பணி மேற்கொள்வது நல்ல நிகழ்ச்சிதான். அதே நேரத்தில், கோவிலின் பெருமையையும், பல நூற்றாண்டிற்கு முன் திருப்பணி மேற்கொண்ட மன்னர்கள் வரலாற்றையும் அழிக்கும் வகையில் இருந்த கல் தூண்கள், சிலைகளை அப்புறப்படுத்துகின்றனர். கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு சிறப்பான பல இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் கோபுரம் கட்டாமல் பழங்கால வரலாற்று பதிவுகளை மறைக்கும் வகையில் புதிய ராஜகோபுரம் கட்டுவது எந்த வகையில் நியாயம். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, அவர்கள் அறிவுரைப்படி ராஜகோபுரம் கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.