பதிவு செய்த நாள்
01
செப்
2018
12:09
திருத்தணி : மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளதால், பாலாலயம் மற்றும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலின், துணைக் கோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில் உள்ளது.
இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், கோவில் நிர்வாகம், வரும் டிச., 12ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து, திருப்பணிகளைத் துவக்கியுள்ளது. இதனால், நேற்று முதல், வரும் டிச., 12ம் தேதி வரை, மூலவர் அம்மன் சன்னதி மூடப்பட்டிருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாலயம் நிகழ்ச்சி நேற்று, கோவில் வளாகத்தில் நடந்தது. இதற்காக, ஒரு யாகசாலை அமைத்து, அத்தி மரப்பலகையில் அம்மன், விநாயகர் போன்ற உருவப்படங்கள் வரையப்பட்டு, பக்தர்கள் பிரார்த்தனைக்காக, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. வரும், டிச., 12ம் தேதி வரை, மேற்கண்ட உருவப்படங்கள் மூலம், மகிஷாசுரமர்த்தினி அம்மனை பக்தர்கள் தரிசிக்கலாம். இந்த பாலாலயம் நிகழ்ச்சியில், கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி உட்பட, முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.