பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா 158 இடங்களில் கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம்,கீழக்கரை,கடலாடி,சாயல்குடி, கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. 158 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இளைஞர்கள் பங்கு பெறும் வகையில் உறியடி, வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டது.குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து அவர்களை வணங்கும் நிகழ்ச்சி நடந்தது.உத்தரகோசமங்கை: ஏர்வாடி அருகே கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
அதிகாலை 4:00 மணியளவில் சுதர்ஸன ஹோமம் செய்யப்பட்டு காலை 11:00 மணியளவில் விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடம் ஏந்திய பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வீதியுலா வந்தனர். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 11:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 12:01 மணிக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 11:00 மணிக்கு கயிறு இழுக்கும் போட்டி, பகல் 12:00 மணிக்கு 20 அடி உயரமுள்ள வழுக்குமரத்தில் ஏறும் போட்டி, உறியடி உற்ஸவம், மாலையில் தேரோட்டமும் நடக்கும்.