பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
தர்மபுரி: கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அதகபாடி லட்சுமி நாரயணன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, லட்சுமி நாராயணனுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் பாலாபிஷேகம் நடந்தது.
* ராதே கிருஷ்ண கோவிலில், ராதே கிருஷ்ண கோவில் சுவாமி விஷ்ணு, லட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 11:00 மணிக்கு, கோலாட்டம் நடந்தது.
* தர்மபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள, சென்னகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 6:00 மணிக்கு உரியடி நடந்தது.
* இதேபோல், தர்மபுரி கோட்டை வரலட்சுமி பரவாசுதேவர் கோவில், செட்டிக்கரை சென்றாயபெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாயபெருமாள் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமணா கோவில் உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்மசுவாமி கோவில் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலம் நடந்தது. தர்மராஜா கோவிலில் உள்ள, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, உற்சவரை தேரில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த இரண்டு தேர்களும், நரசிம்மசுவாமி கோவில் தெரு, கோட்டை, நேதாஜி சாலை விழியாக காந்திசிலை வரை சென்று, கோவிலுக்கு திரும்பியது. ஏராளமான இளைஞர்கள், மேள தாளங்கள் முழங்க, உற்சாகத்துடன் தேரை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
ஓசூர்: அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், மாவட்ட செயலாளர் சாந்தகுமார் தலைமையில், நேற்று, கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஓசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே துவங்கி, தாலுகா அலுவலக சாலை, நேதாஜி ரோடு, எம்.ஜி., ரோடு வழியாக ஊர்வலம் சென்றது. ஹரே கிருஷ்ணா கோஷத்துடன், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பெண்கள் பலர், குழந்தைகளுக்கு, கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு வார விடுமுறை நாட்கள், ஆந்திரா, கர்நாடகா பக்தர்கள் கூட்டம் வருகை அதிகமாக காணப்படும். இந்நிலையில், நேற்று, கிருஷ்ணஜெயந்தி மற்றும், வாரவிடுமுறை நாள் என்பதால், வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.