பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
திருத்தணி: ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு கிராமத்தில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மூன்று நாள் உற்சவம் நேற்று துவங்கியது. நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் கிருஷ்ண பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, மூலவருக்கு அபிஷேகம், கலை நிகழ்ச்சிகள், மாலையில் ஊஞ்சல் சேவையும், நாளை, கிருஷ்ணர் ராதா ருக்மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி மற்றும் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.