பதிவு செய்த நாள்
04
செப்
2018
11:09
கோபி: பாரியூர் வகையறா கோவில்களில், தீத்தடுப்பு நடவடிக்கையாக, தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வகையில், புது வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கோவில்களில், தற்போது தீபமேற்றி வழிபடுவதில், பல்வேறு பாதுகாப்பு விதி கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி பிரபல கோவில்களில், அணையா விளக்கு முறை வைக்கப்பட்டுள்ளது. இதன்படி கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், அணையா விளக்கு வைக்கப்பட்டது. தற்போது மேலும் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாரியூர் அம்மன் மற்றும் பெருமாள் கோவிலில் தலா, 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது.
அமரபணீஸ்வரர் கோவிலில், 30 அடி ஆழத்திலும் கிணறு உள்ளது. தண்ணீர் வசதியுள்ள இம்மூன்று கோவில் கிணறு மூலம், அவசர காலங்களில், தீயணைக்க வசதியாக, தண்ணீரை பீய்ச்சியடிக்கும், நீர்த்தும்பி என்ற கருவி வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கருவியில் உள்ள, 150 அடி நீளமுள்ள குழாய் மூலம், அவசர காலங்களில், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. கிணற்று மோட்டரை ஆன் செய்ததும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் கருவி இயங்கும். இதேபோல் புகை ஏற்படும் சமயங்களில், ஆபத்தை உணர்த்தும் வகையில், மூன்று கோவிலில் மொத்தம் ஆறு இடங்களில், ஸ்மோக் டிடெக்டர் வசதி செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.