பதிவு செய்த நாள்
04
செப்
2018
11:09
பு.புளியம்பட்டி: கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு, வேணுகோபாலசுவாமி கோவிலில், பக்தர்கள் உறியடித்து வழிபாடு செய்தனர். பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில், வேணுகோபாலசுவாமி, கருடபகவான், கோபாலகிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, நேற்று முன்தினம் (செப்., 2ல்), உட்டி மரம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், 100 அடி உயர பச்சை மூங்கில் மரத்தை, பக்தர்கள், பவானி ஆற்றுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். அதில், தேங்காய் ஒன்றை கட்டி, கோவில் முன்புறம் நட்டனர். நேற்று (செப்., 3ல்) காலை முதல் சிறப்பு பூஜை, பஜனை நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணியளவில் கருட வாகன சப்பரத்தில், சுவாமி திருவீதியுலா தொடங்கியது. அம்மன் கோவில் வீதி, பங்களாமேடு, அண்ணாநகர், விக்னஷேநகர், ராஜீவ்நகர், வினோபாஜி வீதி, தேவாங்கபுரம் வழியாக கோவிலை அடைந்தது. இதையடுத்து இரவு, 7:00 மணிக்கு உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.