பதிவு செய்த நாள்
06
செப்
2018
11:09
புதுடில்லி: கங்கை நதியை அசுத்தம் செய்வோர் மற்றும் ஆக்கிரமிப்போரை கைது செய்யும் அதிகாரம் உடைய, ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை அமைக்க வேண்டும் என, கங்கை பாதுகாப்பு தொடர்பான வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில், 2,500 கி.மீ., நீளத்துக்கு மேல் பாயும், வற்றாத ஜீவநதியான கங்கை, மிகவும் மாசடைந்துள்ளது. புண்ணிய நதியாகக் கருதப்படும் கங்கையை தூய்மைப்படுத்த, தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது. கங்கையை தூய்மைப்படுத்துவது தொடர்பான நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கங்கையை பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றவும் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கங்கையின் பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதற்கான வரைவு சட்டம் உருவாக்க, அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கிரிதர் மாள்வியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2016ல், தன் வரைவு சட்டத்தை தாக்கல் செய்தது. இது குறித்து, நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்து, வரைவு மசோதாவை இறுதி செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிக்கும்படி, அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன. இந்த வரைவு மசோதாவின்படி, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம், ஆயுதம் ஏந்திய கங்கை பாதுகாப்புப் படை அமைக்கப்படும். கங்கையில் சட்டவிரோதமாக மீன் பிடிப்போர்; கங்கையின் குறுக்கே, அதை தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்து வோர்; மாசு ஏற்படுத்துவோர் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான அதிகாரம், இந்தப் படைக்கு இருக்கும்.
இவ்வாறு மாசுபடுத்துவோருக்கு, இரண்டு முதல், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க, இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இந்த சட்டத்தை செயல்படுத்த, கங்கை மாசடைவதை தடுக்க, தேசிய கங்கை கவுன்சில், தேசிய கங்கை புனரமைப்பு ஆணை யம் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன.
ஆற்றின் கரையோரங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல், கழிவு நீரை கலத்தல் போன்றவை குற்றமாக்கப்படுகின்றன. அமைச்சகங்களின் ஒப்புதலுக்குப் பின், மசோதா இறுதி செய்யப் பட்டு, அதை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவி த்தனர்.