பதிவு செய்த நாள்
02
பிப்
2012
10:02
பழநி: அரோகரா கோஷத்துடன், பழநியில் தைப்பூச கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, பெரியநாயகியம்மன் கோயிலில் கிராம சாந்தி, விநாயகர், அஸ்த்ர தேவர் காப்புக்கட்டுதல், தீப ஸ்தம்பம் அருகே பூமிபூஜை நடந்தது. நேற்று, முத்துக்குமார சுவாமி சன்னதியில், ஆறு கலசங்கள் வைத்து மயூர யாகம் நடந்தது. சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் சுற்றி, பெரியநாயகியம்மன் கோயில் மண்டபத்தை அடைந்தது. காலை 11.10 மணிக்கு, கொடிகட்டி மண்டபத்தில் திருமுறைகள் முழங்க, கொடியேற்றம் நடந்தது. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையற்கரசி, சித்தனாதன் சன்ஸ் செந்தில், கந்தவிலாஸ் செல்வக்குமார், பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து, நகராட்சி தலைவர் வேலுமணி பங்கேற்றனர். இரவு நான்கு ரத வீதிகளில் பலி பீட பூஜை நடந்தது. கால சந்தி பூஜையில் பெரியநாயகியம்மன் கோயிலிலும், உச்சிக்காலத்தில் மலைக்கோயில், திருஆவினன்குடி கோயிலில் காப்புக்கட்டுதல் நடந்தது. விழா, 10 நாட்கள் நடக்கிறது. பிப்., 6 ல், திருக்கல்யாணம், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, பிப்.,7 ல் தைப்பூச தேரோட்டம் நடக்கும்.
இன்று இரண்டாம் நாள்: பழநிமலை அடி வாரத்திலுள்ள திருஆவினன்குடி முருகனின் "மூன்றாம் படை வீடு ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். குழந்தை வடிவமாக இருப்பதால், வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவ அம்சம் என்பதால், கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்குள்ள பெரியாவுடையாரைத் தரிசித்துவிட்டு, பின் பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். பெரியநாயகி அம்மன் கோயிலில் தான் தைப்பூசக் கொடியேற்றமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பூசத்தன்று தேரோட்டமும் இந்த கோயிலின் ரதவீதிகளில் தான் நடக்கும். இக்கோயிலில் உள்ள உற்சவர் முத்துக்குமார சுவாமி (முருகன்) தைப்பூச விழா நாட்களில் வீதியுலா வருவார்.இன்றைய நிகழ்ச்சிகாலை 9.15: முத்துக்குமார சுவாமி கொடிக்கட்டி மண்டபத்தில் எழுந்தருளல்11: கொடியேற்றம்இரவு 7.30: புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி பவனி.
பேட்டரி கார்:பழநி பக்தர்களின் வசதிக்காக, கிரி வீதிகளில் இலவச "பேட்டரி கார் இயக்கப்பட உள்ளது. பழநி அடிவாரம் பாதவிநாயகர் கோயில், தேவஸ்தான அலுவலகம், வின்ச் மற்றும் ரோப் கார் ஸ்டேஷன், மலையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு செல்லும் வகையில் இவை இயக்கப்படும்.கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், ""ஏழு பேர் அமரும் வகையில் இரண்டு கார், 11 பேர் அமரும் ஒரு கார் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதியவர், நடக்க இயலாதவர் இதில் அனுமதிக்கப்படுவர் என்றார்.