பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
திருவனந்தபுரம்: அரவணை, அப்பம் பிரசாதங்கள் தயாரிக்க, சபரிமலையில் 12 கோடி ரூபாயில் புதிய தயாரிப்பு நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சபரிமலை வளர்ச்சி பணிகள் குறித்து, உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடந்தது. இதில், சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களான அரவணை, அப்பம் போன்றவற்றை தயாரிக்க, ஏற்கனவே தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. ஆனால், தற்போதுள்ளதை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் பிரசாதங்களை தயாரிக்க, புதிய நிலையங்கள் அமைக்கவும், அதற்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கவும் முடிவெடுக்கப்பட்டது. பம்பை முதல் சன்னிதானம் வரை புதிய குடிநீர் திட்டம், பம்பை முதல் மரக்கூட்டம் வரை நடைபந்தல், பக்தர்கள் ஓய்வெடுக்கவும், வரிசையில் களைப்பின்றி செல்லவும் வசதியாக, இரு புதிய கியூ காம்ப்ளக்ஸ், மின்வசதி இல்லாத வனப்பாதையில் மின் விளக்குகள், நிலக்கல் பகுதியில் வனத்துறை அனுமதி பெற்று ஹெலிபேட் அமைக்கப்படும். புல்மேடு துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அரிகரன் நாயர் அறிக்கை கிடைத்ததும், அதில் பரிந்துரைக்கப்படும் அனைத்தும் செயல்படுத்தப்படும். சபரிமலையில், 27 கோடி ரூபாயில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் செய்யப்படும் என்பது உட்பட வேறு பல முடிவுகளும் எடுக்கப்பட்டன.