வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வீரகாளியம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடந்தது.முதல்நாள் பீட பூஜைகளுடன் விழா துவங்கியது. பக்தர்கள் ஊர்வலமாக பெரிய ஊரணிக்கரைக்கு சென்று கரகத்தில் அம்மனை செய்தனர். பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து, வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக அம்மனை கோயிலுக்கு கொண்டு வந்தனர். பெண்கள் பூக்களை துாவியும் மஞ்சள் நீர் தெளித்தும் வரவேற்றனர். அம்மன் கோயில் பீடத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 2 ம் நாளில் பெண்கள் கோயிலுக்கு முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பொது பொங்கல் வழிபாடு நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின் மஞ்சள் நீராட்டு வைபவமும், அம்மன் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இறுதி நிகழ்ச்சியாக அம்மனை கரைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பெண்கள் பூக்களை துாவி அம்மனை வழியனுப்பி வைத்தனர்.சமுதாய தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.