திருப்பதி:ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன், நேற்று கோலாகலமாக துவங்கியது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள, திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பிரம்மன் முன்னிருந்து நடத்தும் உற்சவம் என்பதால், இது பிரம்மோற்சவம் என அழைப்படுகிறது. இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம், நேற்று துவங்கியது. கருட பட்டம் புறப்பாட்டிற்கு பின், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, தன் நாச்சியார்களுடன் மாடவீதியில் வலம் வந்து, அஷ்ட திக்பாலகர்களை பிரம்மோற்சவத்திற்கு அழைத்தார். பிரம்மோற்சவத்தை தலைமையேற்று நடத்தும் கங்கண பட்டர், கருட பட்டத்தை பெரிய மாலையில் சுற்றி, அதற்கு பூஜை செய்து, பெரிய கயிற்றில் அதை கட்டினார்.
அதன்பின், அஷ்ட திக்பாலகர்களையும், முப்பது முக்கோடி தேவர்களையும் பிரம்மோற்சவத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து, மாவிலை, தர்ப்பை புற்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில், கருட கொடியை ஏற்றினார். பிரம்மோற்சவம், வரும், 21ம் தேதி வரை நடக்கிறது.
கருட பட்டம்: மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். ஏழுமலையானுக்கும், கருடாழ்வார் வாகனமாக திகழ்கிறார். அதனால், பிரம்மோற்சவம் துவங்குவதற்கு அடையாளமாக, கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடியில், கருடன் உருவம் வரையப்பட்டிருக்கும்; இதுவே கருட பட்டம் என, அழைக்கப்படுகிறது.