பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
முற்காலத்தில் விழாக் காலங்களில், அம்மையப்பன் வீதிஉலா வருகையில், முன்தொடர்ந்து இசைக் குழுவினர் சேர்ந்து இசைக்கும்போது மனித மனங்களிலுள்ள மாசுகள் மறையும், மனம் ஒருமைப்படும் என்றும், தெய்வீகச் சூழலை ஏற்படுத்துமெனவும், கருதி, இந்நிகழ்வுகளைப் பற்பல கருவிகளைக் கொண்டு, இசைக்கும் வழக்கங்களைக் கொண்டிருந்தனர்.
அதற்கெனப் பயன் படுத்தப்பட்ட இசைக்கருவிகள்:
1. துந்துபி 2. முரசு 3. முளவு 4. துடி 5. பரசு 6. படாலை 7. பணவம் 8. வலை
9. வாயிற் 10. மகுடி 11. கிள்ளை 12. வலம்புரி 13. சின்னம் ஆகியவைகளாகும்.
மேலும் அக்காலத்தில், கோயில் பூஜா காலத்தில் பூசனையின் போது ""சதிர் என்று கூறப்படும் நடன நிகழ்ச்சிகளும், பல நாட்டிய நங்கைகளைக் கொண்டு நிகழ்த்தி வந்திருக் கின்றனர். அவ்வாடல் பாடல் நிகழ்ச்சிகள் பக்க வாத்யம் துணை இசைக் கருவிகள் ""பெரியமேளம் எனப்படும் அதில் பங்குபற்றும் கருவிகள், மத்தளம், வீரமத்தளம், திமிலை, சேமங்கலம், தசை மற்றும் திருச்சின்னமென்றழைப்பார்.
தற்காலத்தில் அத்தகைய நடனமோ, இசைக்கருவிகளோ எதுவும் வழக்கத்திலில்லை. என்றும், நித்யபூஜை காலங்கள், விழாக்காலங்களில் தற்போது பெரியமேளம் அல்லாது, நாதஸ்வரம், தவில், ஒத்து, தாளம் என்ற மூன்று கருவிகள் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. இதில் ஆதார ஸ்ருதி நிர்ணயிக்கப்பட்டு, அதைப்பேணும் கருவியென ஒத்து உதவுகிறது.
ஆதார ஸ்ருதி:
ஏழு சுரங்களின் ஏறு, இறங்கு வரிசைகளில் அடிப்படைச் சுருதியை நிர்ணயிப்பதாகும். ஏழுஸ்வரங்களின் கிரமவரிசை லயம் பெரும்பாலும் அதனதன் ஸ்தாயி இடங்கள் விட்டு விலகாதிருக்கும். ராகம் மாறும்போது, சில ராகங்களில் சில ஸ்வரங்களில் பேதம் வருவதுண்டு. அந்த பேதங்களே ஸ்வர மாற்றம் ஒலி அந்தந்த ராகங்களைத் தனியாகக் காட்டுவதும், அதுவே பண்புமாகும். அந்த பேதங்கள் எந்த ஸ்வரத்தில் என்பதைக் குறிக்க ஸ்வரத்திற்குத் தனிப் பெயரிட்டுக் கூறுவர்.
"ஸ - சட்ஜமம்,
"ரி - ரிஷபம்,
"க - காந்தாரம்,
"ம - மத்திமம்,
"ப - பஞ்சமம்,
"த - த்வைவதம்,
"நி - நிஷாதம் எனப்படுவதாகும். இதில் எல்லா ராகங்களுக்கும் பொதுவான ஆதார ஸ்ருதி மூன்றாகும்.
ஸ - ப - ஸ, இதில் இறங்கு, ஏறு முகத்தில் ப மாறாத்தன்மையுடன் இருக்கும்.
ஸ - இருநிலைகளில் மட்டும் மாறும். ஸ்ருதி மாதா - லயபிதா என்பர் இசை மேதைகள்.
இசையைப்பற்றி அடியவனுக்கு அறிந்த அளவில் சொல்லுவதுகூட இஃது மிகவிரியும் என்பதால் ""ஆதார ஸ்ருதி பற்றி மட்டுமே கூறப்புகுந்தேன்.
தேவாரம், திருவாசகம் எனத் தமிழ்மறை ஒதிய அருளாளர்கள் வரிசையில் நால்வர் எனப்படும் அப்பா, சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், இந்நால்வரும் சைவசமயம் தழைத் தோங்கச் செய்வதற்கென்றே அவதரித்து அனுபூதி பெற்றவர்களாவர். நாவுக்கரசர் வயது முதிர்ந்த வராயினும் ஞானசம்பந்தரே முதலில் திருப்பதிகம் பாடியவராவர். அதேபோல் முதலில் இறைத் திருவடி அடைந்தவரும் ஆவர் எனக் காரணமாய் அவருடைய பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளில் சேர்த்துத் தொகுக்கப்பட்டது. அவர் காலத்திலேயே சமகாலத்தில் நாவுக்கரசர் வாழ்ந்தவர் எனினும் முதற்சிறப்பு ஞானசம்பந்தருக்கே அளிக்கப்பட்டுள்ளது.
நால்வரில் மற்றும் இருவர் அத்தகைய புகழ் பெற்றவர்களே. அடியார்க்கடியார்களை இறைவனே அவர்க்கும் அடியான் யான் எனக்கூறியிருப்பதை இவர்கள் பெருமையை உயர்த்துவது அல்லவா! தமிழிசை, தமிழ்மொழியைப் போல் பழமையிற் கலந்ததே. ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டுக் காலத்தவர் என்கையில் அவர் பாடல்கள் துவங்கி, ஏனைய அருளாளர்கள் அனைவரின் பாடல்களும் பண்ணோடு பாடிப் பரவியதால், ஒவ்வொரு பதிகங்களுக்கும் அவர்கள் பாடிய பண்ணையே பலகாலம் பலரும் இசைந்து வந்தனர்.
கிட்டதட்ட 16ம் நூற்றாண்டு வரை இப்பண்பு தமிழ்நாட்டில் மாறாத நிலையில் இருந்தது. பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் பழைய முறைப்படி பண்ணமைத்து பாடுவோர் குறைந்து போயினர். இவ்விதமே சில பொதுமுறைகளை புதிய முறைகளை தொகுத்துப் பாடி வந்தனர். அத்தோடு பகற்பண், இராப்பண், பொதுப்பண் என மூவகைப் பண்களையும் அதற்குரிய இராகங் களையும், பிற்காலத்தில் ஓரளவு நிர்ணயித்தார்கள். இக்காலப் பரிமாணங்களுக்கு ஏற்றாற்போல் நாழிகை வாரியாக பண்ணையும் பிரித்தார்கள். "பகற்பண் மூன்று நாழிகைக்கு ஒன்றாகப் பத்துப் பண்களையும், 10 ராகத்தில் பாடி வந்தனர். அஃதே போல் "இரவுப் பண்கள் ஒவ்வொன்றும் 3 நாழிகையாகக் கணக்கிட்டு எட்டுப் பண்களில் எட்டு ராகங்களில் இராப்பண்ணாகப் பாடியுள்ளார். கீழே நாழிகை கணக்கில் இருந்து அதற்குச் சரியான மணி, நிமிடக் கணக்கில் அவற்றின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மணி நிமிடம் - பகற்பண் - இராகம்
0-1 மணி 12 நிமிடம் - புறநீர்மை - ஸ்ரீ கண்டி
1.12 முதல் 2.24 வரை - காந்தாரம், பியந்தை - இச்சிச்சி
2.24 முதல் 3.35 வரை - கௌசிகம் பைரவி
3.36 முதல் 4.48 வரை - இந்தோளம், திருக்குறுந்தொகை - நெளிதபஞ்சமி
4.48 முதல் 6.00 வரை - தக்கேசி - காம்போதி
6.00 முதல் 7.12 வரை - நட்டராகம், சதாரி - பந்துவராளி
7.12 முதல் 8.24 வரை - பழம்பஞ்சுறம் நட்டப்பாடை - நாட்டக்குறிஞ்சி
8.24 முதல் 9.36 வரை - பழம்பஞ்சுறம் - சங்கராபரணம்
9.36 முதல் 10.48 வரை - காந்தாரபஞ்சமம் - கேதாரகௌளை
10.48 முதல் 12.00 வரை பஞ்சமம் ஆகிரி
மணி, நிமிடம் - இராப்பண் - இராகம்
12 முதல் 1.30 வரை - தக்கராகம் - கன்னடக் காம்போதி
1.30 முதல் 3.00 வரை - பழந்தக்கராகம் - சுத்தசாவேரி
3.00 முதல் 4.30 வரை - சீகாமரம் - நாதநமக் கிரியை
4.30 முதல் 6.00 வரை - கொல்லிக்கௌவாணம் - சிந்து, கனடா நேரிசை, திருவிருத்தம்
6.00 முதல் 7.30 வரை - வியாழக்குறிஞ்சி - சௌராஷ்டிரம்
7.30 முதல் 9.00 வரை - மேராகக்குறிஞ்சி - நீலாம்பரி
9.00 முதல் 10.30 வரை - குறிஞ்சி - பிலகிரி
10.30 முதல் 12.00 வரை - அந்தாளிக்குறிஞ்சி - சைலதேசாட்சி
இவ்வண்ணமே அன்றைய தமிழ் இசை, பண்காலம், இராகம் என மூன்றும் பொருந்திய இசையைப் பொது இலக்கணமாக ஆக்கியிருந்தனர். இத்தோடு பகலிரவு எக்காலமும் பாடுதற்கேற்ற வகையில் மூன்று பொதுப் பண்களையும் ஆக்கினர். அவை,
1. செவ்வழி - எதுகுல காம்போதி
2. செந்துருத்தி - மத்திமாவதி
3. திருத்தாண்டவம் - தியாகடை
இவ்வண்ணமே மதுரை திருக்கோவிலில் திருமுறை விண்ணப்பித்திருந்தனர். ஆலவாய் இறைவன் சிவபிரானுக்கு மிக விருப்பமுடைய இசையாய் ஓதுவார்களால் இசைக்கப்படும் திருமுறையேயாகும். அவ்விசைக்கே இறைவன் பெரிதும் இசைந்தான் எனலாம். மதுரைக் கோவிலில் நாதஸ்வர இசையில் நித்திய பூஜை காலங்களில் இசைக்கப்படும் இராகங்கள் (இன்றைய காலமுறைப்படி)
திருவனந்தல் - பூபாளம், சாவேரி, பௌளி, மலயமாருதம், சக்ரவாஹம்
காலை பூஜை - பிலகரி, கேதாரம், ஆரபி, தன்யாசி
உச்சிக்காலம் - ஸ்ரீ ராகம், சுருட்டி, மத்திமாவதி, மணிரங்கு
காலை விளக்கேற்றும் காலம் - சங்கராபரணம், கல்யாணி, நாட்டக்குறிச்சி, தோடி, வாசஸ்பதி, மோகனம்
இரவு பூஜைக் காலம் - காம்போதி, ஹரிகாம்போதி, தோடி, பைரவி,ஆனந்தபைரவி
பள்ளியறை பூஜைக் காலம் - நீலாம்பரி - வடக்குப்பிரகாரம் சன்னதி வரை. ஸ்வாமி வருகையில் ஆனந்த பைரவி
சிவபெருமானை நம் உருவில், நம் பண்பில் பார்ப்பதிலும், ஆகமவழியில் அறிதலிலும், சிவபிரானின் ஸ்தூல சரீரமே திருமுறை என்றும், சூட்ஷம சரீரம் ஆன்மா என்றும், அதிசூட்ஷம சரீரம் என்றும் சிவாகமம் வெளிப்படுத்துகிறது. மந்திரச் சொல்லும், மந்திரமும் வேதங்கள் சார்ந்த இசையே. அவ்வேத இசையில் சாமகானம் இறைவனை வெகுவாகக் கவர்ந்ததென்றும் அவ்விசையை இசைத்து இறையருள் பெற்றவர் இராவணன் எனவும் கூறுவர். அடியார்கள் பாடும் பண்ணிலும் இசையே. இறைவனால் சமைக்கப்பட்ட இப்பிரபஞ்சம் முழுவதும் இசைவடிவில் ஓசையே. இவ்வாறே இறைவனுக்கு உகந்த தேவாரத் திருவாசகத் திருப்பண்களின் திருமுறை விண்ணப்பம் திருக்கோவிலில் பூஜா காலங்களிலும் விஷேட விழாக் காலங்களிலும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தது. ஓதவார்களைப் பண்டாரம் என்பது அக்கால வழக்கு. பிடாரர், பண்டாரம், பட்டாரக்கர் என்பதிலிருந்து மருவி வந்த சொல்லாகும்.
தற்காலத்தில் பூஜா, மற்றும் விழாக் காலங்களில் நடனம் பழங்கால ஒலிக்கருவிகள் என்ற நிலைகளில் இசை தற்போது மாறி குறிப்பிட்ட காலங்களில் மட்டும் ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பமும் மங்கள இசையாக நாதஸ்வரம், தவில், ஒத்து, தாளம் எனவும் இசை வழிபாட்டு முறை மாறி நிற்கிறது. எவ்விசைக்கும் இறங்கும் இறைவன், எத்திசைக்கும் தலைவன் இறைவன் எதற்கும் வசப்படுவான். எனினும் அன்பிற்குள் அகப்படும் அவனை என்புருக வேண்டிற் எப்பிறப்பும் துணைவருவான் அன்றோ.!