பதிவு செய்த நாள்
14
செப்
2018
04:09
ஒரு சிறு தொகுப்பு
மதுரைக் கோயிலிலே ஸ்ரீ மீனாக்ஷிஅம்மனுக்குத்தான் முதலிடம் மரியாதை எல்லாம். பூஜை முதலியனவும் முதலில் அவளுக்குத்தான் நடக்கும். அதற்குப் பிறகே சிவபெருமானாகிய சுந்தரேஸ்வரருக்கு. அவ்விதம் செய்வதற்குக் காரணம் சொல்லுவார்கள்; அவள் பிறந்தகத்துச் செல்வியாம், அது மட்டுமா பாண்டிய ராஜ்ஜிய வம்சத்தில் பிறந்த அவள் தந்தைக்குப் பின் அரசியாக முடிசூட்டப்பெற்று ராஜ்யபாரம் வகித்து நடத்தியிருக்கிறாள். அது அவளுடைய தலைநகரம். அவளை மணந்த சிவபெருமான் மாமனார் வீடு புகுந்த மருமகன் தானே!
மாமனார் வீட்டோடு ஐக்கியமான மாப்பிள்ளையைப் பற்றி இரசமாகச் சொல்வார்கள். தெய்வங்களும் அதற்கு விலக்கல்லவே!! சிவன், விஷ்ணு ஆகிய இருவருமே அப்படித்தான். பாற்கடலிலே பிறந்தவள் திருமகள். அவளை மணந்த விஷ்ணுவும் பாற்கடலுக்கே போய்விட்டார். நிரந்தரமாய் அங்கே பள்ளி கொண்டிருக்கிறாராம். அதேபோல மலையரசனுக்கு மகளாகப் பிறந்தவள் பார்வதி. அந்தப் பெயரே மலையைக் குறிக்கும். பர்வதம் எனும் சொல்லின் அணியாகப் பிறந்தது. அவளை மணந்த சிவபெருமானும் மலைவாசத்துக்குப்போய் விட்டார். அதனாலே அவருக்கு கிரீசன் என்ற பெயரும் உண்டாம். இந்த வரிசையிலே இன்னும் ஒருவரையும் சேர்க்கலாம். அவர் குமரக் கடவுள் குறமகளான வள்ளியை மணந்த அவரும் குறமக்கள் வாழும் மலைப்பிரதேசத்திற்கே போய்விட்டார். முருகனுடைய அறுபடை வீடுகளுள் குன்று தோறாடலும் ஒன்று என்பது இதனை எடுத்துக்காட்டும். இதிலே ஒரு வேடிக்கை தந்தை, மகன் ஆகிய இருவருமே மலையை தங்கள் வாசஸ்தலமாக கொண்டனர். அவ்விருவருள் அந்த உரிமை யாருடைய என்பது பற்றி பக்தர்களிடையே மயக்கம் தோன்றியது போல் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள்.
சிவபெருமான் புதிய அல்லது பழைய மலை நாடன் விருத்தகிரீசன் முருகக் கடவுளை இளமை மலை நாடன் குமார கிரீசன் என்று குறிக்கலாயினர். அத்தகைய சங்கேதம் தீவாந்திரப் பிரதேசத்திலே காம்போஜன் போன்ற நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகளிலே தெளிவாகக் காணப்படுகிறது. விருத்த கிரீசன், குமார கிரீசன் என்ற பெயர்களை இன்றைக்கும் தமிழ்நாட்டிலே தரித்து வருவதைக் காணலாம். மீனாக்ஷியம்மன் பாண்டிய வம்சத்திலே பிறந்த கதையைத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. மலையத்துவஜன் என்ற பாண்டியன் முன்நாளிலே அரசு புரிந்து வந்தான். அவனுக்கு பிள்ளை இல்லை. பிள்ளை வரம் வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தான். எம்பெருமான் அவருக்கு ஒரு பெண்ணை அளித்தார். பிறக்கும்போதே அந்த குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்தனவாம். அதைக் கண்டு மலையத்துவஜன் கவலைப்பட்டான். அவள் தனக்கு கணவனாக வரப்போகிறவனைக் கண்டவுடனே மூன்றாவது தனம் மறைந்து விடும் என்று சிவபிரான் அனுக்கிரஹம் செய்தார். அரசனும் குழந்தைக்குத் தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அவளுக்கு அரச பதவி ஏற்பதற்கு அறிந்திருக்க வேண்டிய துறைகள் பலவற்றிலும் முறையே அவள் பயிற்சி பெற்றாள். காலக்கிரமத்தில் தந்தைக்குப் பின் சிங்காதனம் ஏறி ராஜ்யபாரம் வகிக்க ஆரம்பித்தாள்.
ஒரு சமயம் அவள் பெரும்படையோடு திக் விஜய யாத்திரை கிளம்பினாள். வழியிலே பல அரசர்களையும் வெற்றி கொண்டு கைலாச மலை வரையில் சென்றாள். அங்கே சிவபெருமானைக் கண்டதும் அவளுடைய தனம் மறைந்ததாம். சிவபெருமானும் அவளை மதுரைக்கு அழைத்து வந்து திருமணம் புரிந்து கொண்டாராம்.
சுந்தரர் என்ற பெயரைத் தாங்கி நீண்டகாலம் அவளோடு கூட அரசு புரிந்து வந்தார். அவர்களுக்கு உக்கிர பாண்டியன் என்ற பிள்ளை ஒருவன் பிறந்தான். உரிய காலத்தில் அவனுக்கு முடிசூட்டி அரசை அவருக்கு அளித்து விட்டு அவர்கள் மதுரைத் திருக்கோவிலினுட் புகுந்து மறைந்து விட்டார்களாம். இதிலிருந்து தடாதகைப் பிராட்டியாரையும் தேவியின் அம்சமாக நம்முன்னோர்கள் கருதினார்கள் என்பது விளங்கும்.
தடாதகை என்ற சொல்லைத் தடு-ஆ-தகை என்று விரித்து தடுக்க முடியாத தகைமை வாய்ந்தவள் அவள் என்பதை உணர்த்துவதற்காகவே கொள்வர். ""அதைத் தடாதகா என்ற சமஸ்கிருதச் சொல்லாகக் கொண்டு தேவியின் அவதாரமான அவள் மானிட வயிற்றிலே பிறக்காமல் குழந்தை உருவில் பொற்றாமரைக் குளத்தில் தோன்றியவள் என்பதை உணர்த்துவதாகவும் வேறு சிலர் கூறுவர். எவ்விதமாயினும் அந்தப் பெயரைக் காட்டிலும் ""மீன் விழியாள் என்பதைத் தெரிவிக்கும் மீனாக்ஷி, கயற்கண்ணி, அங்கயற்கண்ணி என்பன போன்ற பெயர்களாலேயே அவள் பிரசித்தம். ஸ்ரீ மீனாக்ஷியைப் போலவே பாண்டிய வம்சத்தில் பிறந்து உரிமையால் அரசை அடைந்து ஆட்சியை நடத்திய பெண்களைப் பற்றிய வேறு சில கதைகளையும் நாம் கேள்வியுறுகிறோம். அதன் வழியில் கீழே பல வரலாறுகளைக் காவியம் என்றோ, புராணம் என்றோ வேதம் என்றோ தனித்துப்பார்க்காது ஒவ்வொன்றிலும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி உண்டு என்பதைப் புரிந்து கொள்வோம்.
அல்லியின் வரலாறு அவற்றில் ஒன்று. தமிழ் நாட்டிலே அந்தக் கதை சற்று பிரசித்தமானதுதான். புகழேந்திப் புலவர் இயற்றியதாக கருதப்படும் ஜனரஞ்சகமான கிராமிய காவியம் மற்றொன்றும் உண்டு. பாண்டிய அரசகுமாரியான அல்லி மதுரையிலே முடிசூட்டிக்கொண்டு ஆட்சிபுரிந்து வந்தாள். ஆண் வாசனையே விரும்பாத அவள் அதிகாரிகள், போர்ப்படையினர் எல்லோரும் பெண்டிர்களே! அந்நாளில் பாண்டியர்களுள் ஒருவரான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைக்காகக் தென்னாடு வந்த போது மதுரைக்குள் சென்றான். அல்லியைப் பற்றியும் கேள்விப்பட்டான். எப்படியாவது அவளை தன்வசப்படுத்த வேண்டுமென விரும்பினான். அவனுக்கு உறுதுணையான கிருஷ்ண பகவான் உதவிக்கு வந்தார். பாம்பின் உருவிலே இரவுநேரத்தில் அந்தப்புரத்தில் அர்ச்சுனன் புகுந்து மந்திரத்தால் அவளை மயங்கச் செய்து அந்த நிலையிலே அவளுடன் கூடி மகிழ்ந்த பின் பொழுது விடிவதற்குள் வெளியேறி விடுவார்.
இவ்விதம் சிறிது காலம் நடந்து வந்தது. அல்லி கருவுற்றாள். அதை அறிந்த அர்ச்சுனனும் கிருஷ்ணனும் காரணமாய் வெளியேறி தீர்த்த யாத்திரையை முடித்து ஊர் திரும்பினர். அல்லி தன் நிலையை உணர்ந்ததும் கொதித்தெழுந்தாள். அடாத இச்செயலுக்கு காரணமானவனையும் தண்டிக்க விரும்பியது அவள் உள்ளம். அவன் யார் என்பதை முதலில் அறிய வேண்டுமே?அதற்காக 56 தேசத்து அரசர்களுக்கும் தூதனுப்பி குற்றவாளியைப் போருக்கு அழைத்தாள். செயல்புரிந்தவன் யாரென்பது நிச்சயமானவுடன் அவளே படையை நடத்தி போருக்கு வடக்கே சென்றாள். பாண்டவர்களால் அவளோடு நேருக்கு நேர் நின்று போரிட்டு வெற்றி கொள்ள முடியவில்லை. மறுபடியும் கிருஷ்ண பகவானே உதவிக்கு வர வேண்டியிருந்தது.
வஞ்சகமாக அவளை ஒரு கூண்டுக்குள் சிக்கச் செய்து சிறைபிடித்து விட்டார்கள். அடிபட்ட சிங்கம் போல் நின்ற அவளுடைய கோபத்தை சமாதானம் செய்த திரௌபதி முதல் தேவியர் அனைவரும் அவளிடம் வந்து மன்றாடினர். அர்ச்சுனன் தேவியரான சுபத்திரை, உலூபி போன்றவர்களும் அவ்விதமே வந்து அவனிடம் வேண்டினார்கள். கடைசியாக அல்லியும் நிலையை உணர்ந்து அங்கே சிறிது காலம் தங்கி ஊர் திரும்பினாளாம். மதுரையிலே அவளுக்கு புலந்திரன் என்ற மகன் பிறந்தானாம். அல்லியைப் பற்றிய வேறு சில கதைகளும் உண்டு. அவைகளும் கிராமிய காவிய உருவத்திலேயே உள்ளன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியில் பாண்டவர்களை அவமானப்படுத்துதற்கு துரியோதனன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பல சமயங்களில் அல்லி தலையிட்டு கௌரவர்களையே அதில் சிக்கி அவமானப்படும்படி செய்தது மட்டுமில்லாமல் அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள பாண்டவர் உதவியை நாடும் படியாகவும், அவள் செய்தாளாம். ஏணியேற்றம் போன்ற காவியங்கள் இத்தகைய கதைகளையே உரைப்பனவாகும்.
ஆதிபர்வத்திலே அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செய்த காலத்தில் நிகழ்ந்ததாகவே அது காணப்படுகிறது. கலிங்கத்தை விட்டுக் கிளம்பிய பிறகு அர்ச்சுனன் மகேந்திர கிரி, கோதாவரி முதலிய இடங்களுக்குச் சென்று அப்பால் காவிரி கடலுடன் கலக்கும் இடத்தை அடைந்தான். அங்கிருந்து கரையோரமாகவே தெற்கு சென்று மணலூர் என்னும் இடத்தை அடைந்தான் .அவ்விடத்திலே சித்திரவாஹணன் என்பான் அரசு புரிந்து வந்தான். சித்ராங்கதை என்று அவளுக்கு அழகிய மகள் ஒருத்தியிருந்தாள். அவளை மணக்க விரும்பி அவளுடைய தந்தையை அணுகினான். பெண்ணைக்கேட்பவன் யார் என்ற விவரத்தை அறிந்த சித்ரவாஹனன் அதற்கு இணங்கினான். ஆனால் ஒரு நிபந்தனை. சித்ரவாஹனனுடைய மூதாதையர்களுள் ஒருவரான பிரபஞ்சனன் என்பான் பிள்ளைவரம் வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தான். சிவபெருமானும் அதற்கு இணங்கி அந்த வம்சத்திலே தலைமுறை தலைமுறையாக ஒரே குழந்தை பிறக்கும் என்று அருளிச்செய்தாராம். அது போலவே சித்ரவாஹனன் காலம் வரையில் ஒவ்வொருவனுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்து வந்திருக்கிறது. சித்திரவாஹனனுக்கோ ஒரு பெண் குழந்தை மட்டும் பிறந்திருக்கிறது. அந்த குலம் அவள் மூலமே தழைத்தோங்க வேண்டும். அதனால் அவளை மணந்து கொள்பவன் அவனுக்கு பிறக்கும் முதல் ஆண் குழந்தையை புத்திரிகா புத்திரன் என்ற தர்மப்படி தன் மாமனாருக்கு புத்திரனாக அளித்து விட வேண்டும்.
அர்ச்சுனன் அந்த நிபந்தனைக்கு சம்மதித்து சித்ராங்கதையை மணந்து கொண்டான். அவளிடம் அவனுக்கு பிருகுவாஹனன் என்ற மகன் பிறந்தானாம். தான் ஏற்றுக்கொண்டபடியே அர்ச்சுனனும் அந்த மகனை சித்ரவாஹனனுக்கு அளித்துச் சென்றானாம். நாக கன்னிகையான உலூபியை அர்ச்சனன் மணந்து கொண்ட விபரத்தை தெரிவித்து அடுத்தபடியாக இந்தச் சம்பவம் மஹாபாரதத்திலே கொடுக்கப்பட்டுள்ளது. சித்திரவாஹனன் ஒரு பாண்டியன் என்று அங்கே தெளிவாகக் குறிக்கப்பெறவில்லை. எனினும் இந்த எடுத்துக்காட்டு வேறு ஆதாரங்கள் பாரதத்திலேயே அங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. காவிரி நதி கடலுடன் கலக்கும் இடத்திற்கு தெற்காகவே மணலூர் இருந்ததென்று குறிக்கப்பட்டுள்ளது. மணலூரை விட்ட பிறகு அர்ச்சுனன் நேரே தெற்கு சமுத்திரத்திற்கு சென்று நீராடினான் என்று காணப்பெறுகிறது. காவிரிப் பூம்பட்டினத்திற்கும் குமரிமுனைக்கும் இடையில் பாண்டியர் தலைநகரைத் தவிர பிராதன நகரம் வேறு எதுவும் இருந்ததை நாம் அறியோம்.
ஆதிபர்வத்திலே அம்சவாதரன பர்வத்தில் அத்தியாயம் 64 தீர்த்த யாத்திரையின் போது அர்ச்சுனன் நாக கன்னிகையையும் பாண்டியன் பெண்ணையும் அடைந்தான் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. தீர்த்த யாத்திரை பற்றி கூறுமிடத்தில் அவள் பாண்டிய பெண்ணை மணந்த செய்தி தனியாக வேறு எதுவுமில்லை. ஆகவே அது சித்ராங்கதையைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். ராஜசூய யாகம் செய்வதற்கு முன்னதாகச் செய்த திக் விஜயத்தில் தென் திசையை நோக்கி சகதேவன் புறப்பட்டு வந்தானாம். அப்போது அவன் பாண்டிய நாட்டு மணலூரை அடைந்து தன் தமையன் அர்ச்சுனனுடைய மகனான பிருகுவாஹனனைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு வேண்டிய வெகுமதி செய்து திரும்பினான் என்று சபாபர்வம் கூறுகிறது. அங்கே அர்ச்சுனனுடைய மாமன் பெயர் மலையத்துவஜன் என்று காணப்படுகிறது. மற்றொரு இடத்திலே அது சுவேதன் என்றும் வழங்கப்படுகிறது.
இன்னும் தர்மபுத்திரர் அஸ்வமேத யாகம் நடத்திய போது அர்ச்சுனன் மகனும் பாண்டிய அரசனுமான பிருகுவாஹனனை அதற்கு அழைத்திருந்தாராம். அதை ஏற்று இந்திரபிரஸ்தம் சென்ற அவன் பேரன்புடனும் மிக்க சிறப்புடனும் வரவேற்கப்பட்டான். யாகம் நடந்த போது வந்த வேந்தர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை அவனே ஏற்று நடத்தி வைத்தானாம். இந்த செய்தி அஸ்வமேத பருவத்தில் காணப்படுகிறது. தீர்த்த யாத்திரையின்போது மணலூர் அரசன் மகளான பாண்டிய ராஜ்ய குமாரியை மணந்தான் என்ற செய்தி பாகவத புராணம் தசமஸ்கந்தம் 86 அத்தியாயம் விஷ்ணு புராணம் 4 அம்சமும் 20ஆம் அத்தியாயம் பார்த்த சம்பு போன்ற நூல்களிலும் காணப்படுகிறது. அவற்றில் மணலூர் என்பது மணற்புரம் என்றும் காணப்படுவதுண்டு. இந்த கதை மஹாபாரதத்தில் வடநாட்டுப்பாடத்திலே சாதாரணமாக காணப்படவில்லை என்றும் அப்படியே காணப்பட்டாலும், ஊரின் பெயர் மணிபுரம் என்றும் வழங்கப்படுவது எனக்கூறி இதை இடைச் செருகலாகக் கொண்டு ஆராய்ச்சியார்கள் சிலர் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளவிடுகிறார்கள். அதைப்பற்றி நாம் இங்கே ஆராய வேண்டுவதில்லை. எவ்விதமாயினும் பாண்டிய வம்சத்தை பாரத புருஷர்களான பண்டவர்களோடு பிணைத்துக் கூறும் கர்ண பரம்பரை வரலாறு மிகப் பழங்காலத்திலிருந்து நம் நாட்டில் முக்கியமாக தென்நாட்டில் வழங்கி வருவது நன்கு விளங்கும். அதன் எதிரொலியை இலக்கியத்திலும் வசனங்களிலும் காணலாம்.
பாண்டிய மன்னர்களின் செப்பேட்டு சாசனங்களிலே அந்த வம்சத்தின் புராணப்பெருமை பலபடியாச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கப்பட்டு இருப்பதை காணலாம். அவ்விதம் கிடைத்துள்ளவற்றிலே பராந்தகவீர நாராயணன் அளித்த தளவாய்புரம் செப்பேடுகள் உக்கிரன் கோட்டைச் சாசனம் என்றும் சொல்வார்கள். அவர் மகள் ராஜசிம்ஹன் அளித்த சின்னமனூர் செப்பேடுகள் ஆகிய இரண்டுமே அதிகப்படியான செய்திகளைக் கூறுவன.
பாண்டவர்கள் துரியோதினாதியரோடு நடத்திய பாரதப்போரில் பாண்டியர்களும் ஈடுபட்டு கௌரவர்களை வென்று பாண்டவர்களுக்கு உதவினார்களாம். இதைக் கூறுவதோடு ""சின்னமனூர் சாசனத்தின் தமிழ்ப்பகுதியிலே விஜயனை வசு சாபம் நீக்கியும் ""பாண்டியர்கள் புகழ் எய்தினர் என்பதும் காணப்படுகிறது. அதே சாசனத்தின் வடமொழிப்பகுதியிலே ""ஜித விஜய என்று பாண்டியன் ஒருவன் அர்ச்சுனன் மீது வெற்றி கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. தளவாய்புர சாசனத்திலே ""வானரத்துவஜன் வசு சாபம் அகல்வித்தும் என்று காணப்படுகிறது. இப்படி மூன்று விதமாக எழுப்பட்டிருந்தாலும் அவை ஒரே செய்தியைக் குறிப்பனவாகும். மஹாபாரதத்திலே அசுவமேத பருவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அசுவமேத யாகத்திற்கு முன்னதாகத் திக் விஜயத்தின் பொருட்டு விடப்பட்ட குதிரை தென்னாடு வந்த போது அதன் போக்கைத் தடை செய்த பிருகு வாஹனனுக்கும் குதிரைக்கு காவலாக வந்த அர்ச்சுனனுக்கும் நடந்த போரில் அர்ச்சுனன் அடிபட்டு விட அர்ச்சுனன் தேவிகளுள் ஒருத்தியான நாக கன்னிகை உலூபி ஓடோடியும் வந்து மூர்ச்சைத் தெளிவித்து அவனது உண்மை சக்தியும் அறிவும் ஒப்பிலாத வித்தை இயக்கத்தையும் உற்ற நண்பனான கிருஷ்ண பெருமானது அவதார நோக்கமும் அறிவித்தாள். இறுதியில் அவனது மகனே நீ என அறிவித்தாளாம். இவை போல பல கதைகளும், புராணச் சான்றுகளும் தெரிவிக்கும் மையக்கருத்து ஒன்றேதாம். அன்னை மீனாக்ஷியைப் போன்றே பாண்டிய வம்சம், தேசம், அரசு என்ற வகையில் பஞ்ச பாண்டவர்கள் சரித்திரத்தில் பாண்டியர்களின் வம்சவளிப்பெண்ணை பாண்டவர்களின் குலவதுவாக இருந்தாள் என்பதே. தல புராணத்தில் வரும் பல பல செய்திகள்
இன்னும் சில வழக்கத்தில் இருந்த வண்ணமே பேசப்படுகின்றது. இவைகள் உண்மையான வராலாறுகளா! இடைச் செருகலா என கேள்விகள் சிலர் வினவலாம்.
பொய்மை வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்குமெனின்.
என்பது வள்ளுவர் வாக்கு. வழக்கில் உள்ள செய்திகள் பொய்யாயிருப்பினும் அவற்றுள் நாம் உணர வேண்டிய கருத்துக்கள் இருப்பின் அவற்றையும் ஏற்கலாம் என்பதே இது. இப்போது நமக்கு கிடைத்துள்ள மஹாபாரதத்திலே இந்த கதைககள் காணப்படவில்லை. இதே போல் பாரதத்திலே காணப்படாமல் பஞ்ச பாண்டவர் வாழ்க்கையைப் பற்றிய வேறு கதைகள் சிலவும், நம் நாட்டில் வழங்கி வருகின்றன. அவைகளை கவனித்தால் வியாச பகவான் எழுதியதைப்போலவே மஹாபாரதக்கதையை வேறு சிலரும் எழுதி அந்த நூல்களை முன்னாளிலே பிரசித்தமாக இருந்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. எவ்விதமாயினும் பாண்டிய அரசகுமாரி ஒருத்தியை பாண்டவர்களுள் ஒருவனான அர்ச்சுனன் மணந்தான் என்ற ஒரு செய்தி இப்போது வழக்கத்தில் உள்ள மஹாபாரதத்திலும் காணப்படுகிறது.