பதிவு செய்த நாள்
03
பிப்
2012
11:02
முக்கூடல்:பாப்பாக்குடி புதுக்கிராமம் அய்யன்குளக்கரை மகா கணபதி கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.200 ஆண்டுகள் பழமையான பாப்பாக்குடி புதுக்கிராமம் அய்யன்குளக்கரை மகா கணபதி கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 31ம் தேதி கும்ப பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, நவக்கிரஹ பூஜை, சுதர்சன பூஜை, வாஸ்துசாந்தி, சிறப்பு தீபாராதனை ஆகியன நடந்தது. அன்று மாலை நந்தன்தட்டை தாமிரபரணி ஆற்றிலிருந்து கும்பங்களில் புனிதநீர் சேகரித்து கஜ வாகனத்தில் வலம் வந்து, 1ம் கால யாக வேள்வி நடந்தது.நேற்று முன்தினம் 2ம் கால யாகசாலை பூஜை, யாக ஹோமம், சிவசூர்ய, தோரண பூஜையும், மாலையில் 3ம் யாக பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4ம் கால யாக சாலை பூஜை, சிவசூர்ய பூஜை, வேதிகா பூஜை, அர்ச்சனை, 9 மணிக்கு யாத்ராதானம், கும்பம் எழுந்தருளுதல், விமான கும்பாபிஷேகம், பிரதான மூர்த்தி, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், மஹா அபிஷேக கும்ப பூஜை ஆகியன நடந்தது. மாலையில் பிரசன்ன பூஜையும், சப்பரத்தில் கணபதி உற்சவர் வீதியுலாவும் நடந்தது.கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரோஜா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொக்கலால் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கோமதிசங்கர் தலைமையில் மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். கும்பாபிஷேகத்தை வடக்கு அரியநாயகிபுரம் முருகானந்தசிவம் நடத்தினார். கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளை பரம்பரை அறங்காவலர் லட்சுமி அம்பாள், சஞ்சீவிதர்மராஜய்யர் செய்திருந்தனர்.