பதிவு செய்த நாள்
17
செப்
2018
02:09
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று (செப்.,16ல்) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மோகனூர் காவிரியாற்றில் கரைக்கப்பட்டது.
நாமக்கல்லில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் குளக்கரை திடல், தட்டாரத்தெரு உள்ளிட்ட, 15 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப் பட்டது. இந்த சிலைகள் நேற்று (செப்.,16ல்) நகரின் முக்கிய வீதிகள் வழியாக, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலத்தை, நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்கத் தலைவர் அய்யாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தட்டாரத் தெரு, சேந்தமங்கலம் சாலை, மேட்டுத்தெரு, பஸ் ஸ்டாண்ட், பரமத்தி சாலை, கோட்டை சாலை, பிரதான சாலை, மோகனூர் சாலை வழியாக மேள தாளத்துடன் பல்வேறு வாகனங்களில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இறுதியாக, மோகனூர் காவிரியாற்றில் சிறப்பு பூஜைகள் செய்து, அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி ப.வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஸ் சிறப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் இளமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், 225க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* பள்ளிபாளையம் பஸ்நிறுத்தம், பாலம் சாலை, காவேரி, ஆவராங்காடு, வசந்தநகர் மற்றும் பல இடங்களில் கடந்த, 13 ல், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று (செப்., 16ல்) மாலை, 6:00 மணிக்கு அனைத்து சிலைகளும் ஊர்வலமாக, பள்ளிபாளையம் பகுதி முக்கிய சாலைகள் வழியாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கப் பட்டது. இந்து முன்னணி, வி.எச்.பி., மற்றும் பொதுமக்கள் சார்பில் என, மொத்தம், 90 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது என, போலீசார் தெரிவித்தனர்.