மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமுற்ற வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் அடிப்படை வசதிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.திருச்செந்தூர் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை மற்றும் முறைகேடு நடப்பதாக ராஜபாளையம் கல்யாணசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு அந்தந்த மாவட்ட கோயில்களை மாவட்ட நீதிமன்றம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸிமா பானு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தனர். பின் அவர்கள் கூறியதாவது: மதுரையில் 18 கோயில்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், குங்குமம் தயாரிப்பு கூடம், பாதுகாப்பு, பசுமடம், பேட்டரி கார் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தோம். மாநகராட்சியிடம் பக்தர்களுக்காக இலவச கழிவறை கேட்டுள்ளதாக கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர். பெரியளவில் குறைகள் இல்லை என்றனர். இணை கமிஷனர் நடராஜன் உடனிருந்தார்.