பதிவு செய்த நாள்
20
செப்
2018
12:09
திருப்பூர்: பகவானின் அருளுரைகளை பக்தர்களிடம் கொண்டு சேர்க்கத்தான், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன, என, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி பேசினார். திருப்பூர் காயத்ரி மஹாலில், நான் பிறந்த கதை என்ற தலைப்பிலான, ஐந்து நாட்கள் நடக்கும், ஆன்மிக சொற்பொழிவு நேற்று செப்.,19ல் துவங்கியது.
இதில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி பேசியதாவது: பகவானின் நண்பர்கள் மட்டும் பாக்யவான்கள் அல்ல. அவரை எதிர்த்தவர்களும், பகவானின் அருளுக்கு பாத்திரமாகினர். அதாவது, சதா பகவானின் நாமத்தையே நினைத்தனர்; இறுதியாக, பகவான் கையால் மடிந்து, நற்கதியை பெற்றுள்ளனர்.
எனவே, பக்தர்களாக நாம், பகவானின் வரலாற்றுடன், அவர்களது நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். வாசுதேவனின் வரலாறுகளை கேட்பவர்களுக்கு, பாவம் விலகும்; வாழ்வு சுபிட்ஷமாகும். ஒவ்வொரு அவதாரத்தின் போதும், கிருஷ்ணன் மக்களுக்கு நல்ல பாதையை காட்டிச்சென்றுள்ளார். நாம் அவற்றை கண்டறிந்து, நமது வாழ்விலும் பின்பற்றி வாழ
வேண்டும். ஆன்மிக சொற்பொழிவுகள் நடப்பதே, பகவானின் தகவல்களை பக்தர்களிடம் கொண்டு சேர்க்கத்தான். தற்போதைய காலகட்டத்தில், செல்வம் தேடுவதிலும், சேவையாற்று வதிலும் கூட, பக்தியை மறந்துவிடுகின்றனர். பொதுசேவை என்ற பெயரில், இறை வழிபாட்டை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொருவர் குடும்பத்திலும், பக்தி செலுத்தும் மார்க்கத்தில் இருந்து விடுபடக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு, மாலை, 6:30 மணி முதல், 8:30 மணி வரை நடக்கிறது.