பதிவு செய்த நாள்
25
செப்
2018
01:09
நல்ல நிலத்தில் விதைத்தால் ஒன்றுக்கு ஒன்பதாக பலன் கிடைப்பது போல நல்லவருக்குச் செய்த உதவி சந்ததிக்கும் தொடரும் என்பதை விவரிக்கும் கதை இது. உடுமலைப்பேட்டையில் அழகப்பர் என்னும் துணி வியாபாரி இருந்தார். முருகபக்தி கொண்டவர். மாதந்தோறும் பழனி முருகனைத் தரிசிப்பது வழக்கம். முருகன் அருளாலும், நேர்மை குணத்தாலும் அழகப்பரிடம் அளவிலா செல்வம் சேர்ந்தது. கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி என பல ஊர்களில் கிளைகள் இருந்தன. மாதந்தோறும் அங்கு சென்று வசூல் செய்வது வழக்கம். செல்வத்தின் பயன் பிறருக்கு கொடுத்து மகிழ்வதே என்னும் அடிப்படையில் அடியாருக்கு அன்னம் அளித்தல், ஏழைகளுக்கு தொண்டு செய்தல், கோயில் திருப்பணி செய்தல் என பணம் செலவிட்டார். அழகப்பரின் மகன் பழனியப்பனும் தந்தையைப் போல நற்பண்புடன் வளர்ந்தான்.
தினமும் நள்ளிரவில் துறவி ஒருவர் அழகப்பர் வீட்டு வழியாக வருவார். மொட்டைத்தலை, முதிர்ந்த வயது, சிவந்த மேனி, நெற்றியில் திருநீறு, ருத்ராட்ச மாலையுடன் காட்சி தரும் அவர், “பழநியப்பா...பழநியப்பா” எனக் குரல் எழுப்பியபடி வருவார். மக்கள் அவரை ’பழநிசுவாமிகள்’ என அழைப்பர். அந்த துறவியின் குரல் கேட்டதும் அழகப்பர், காய்கறி, குழம்புடன் உணவு எடுத்து வந்து துறவிக்கு வழங்குவார். அழகப்பர் வெளியூர் சென்று விட்டால் பழனியப்பன் சோறிடுவான்.
ஒருநாள் அழகப்பருக்கு உடல்நலம் இல்லாததால் வெளியூர் செல்ல முடியவில்லை. பழனியப்பன் தந்தையிடம் தான் சென்று வசூல் செய்யலாமா எனக் கேட்டான். மகனை வெளியூருக்கு தனியாக அனுப்ப தயங்கிய அவர், வேறுவழியின்றி சம்மதித்தார். பழநி முருகனின் அபிஷேக விபூதியை பூசிவிட்டு, “மகனே! முதலில் பழநி போய் முருகனை வணங்கு. விபூதியை சட்டைப்பை, பணப்பெட்டியில் வைத்துக் கொள்! பொழுது சாய்ந்து விட்டால் பயணத்தை தொடராதே. அந்த ஊரிலேயே இரவில் தங்கு! ஊர் திரும்பும் போது மீண்டும் பழநி முருகனைத் தரிசிக்கச் செல் ” என்று வழியனுப்பினார். பழநி சென்று வழிபாட்டை முடித்து விட்டு வசூலுக்குப் புறப்பட்டான். பல ஊர்களுக்குச் சென்று வசூல் செய்து விட்டு தாராபுரத்தை அடைந்தபோது பொழுது சாய்ந்தது. தந்தையின் கட்டளையின்படி, தாராபுரத்தில் தங்க நேர்ந்தது. தாராபுரம் கடையின் பொறுப்பாளரின் வீடு ஊர் எல்லையில் ஒரு மாடி வீடு. அங்கு வசூலித்த பணம் முப்பதாயிரத்துடன் தங்கினான் பழனியப்பன். பழனியப்பனைக் கொன்றாவது பணத்தை பறிக்க திட்டமிட்டார் பொறுப்பாளர். இரவு 10:00 மணிக்கு வீட்டின் மாடியறையில் தங்கிய பழனியப்பன், தந்தையின் விருப்பப்படி பழநிமுருகன் திருநீற்றை பூசிக் கொண்டு தூங்கினான். அருகில் பணப்பெட்டியும் இருந்தது. தீபம் மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
கனவில் பழநிசுவாமிகள் தோன்றி “மகனே! இங்கே இருக்காதே! உன் உயிருக்கு ஆபத்து! எழுந்திரு! எழுந்திரு!‘ என்று சொல்லவே பழனியப்பன் விழித்தான். உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டியது. உடனே அறையை விட்டு வெளியேறி எதிர்வீட்டுத் திண்ணையில் பதுங்கினான் பழனியப்பன். சற்றுநேரத்தில் இருளில் ஓர் உருவம் மாடிக்குச் சென்றது. “முருகா... முருகா....” என ஜபித்தபடி பழனியப்பன் நின்றிருந்தான். அந்நேரத்தில் அவன் இருந்த வீட்டுக்காரர் வெளியில் வந்த போது, பழனியப்பனிடம் நடந்ததையெல்லாம் கேட்டறிந்தார். “அந்தப் பாதகன் பணத்திற்காக எதுவும் செய்வானே...” என்றபடியே பழனியப்பனுடன் மாடியறையில் நடப்பதை கண்காணித்தார். அங்கிருந்து கையில் எதையோ சுமந்தபடி பொறுப்பாளர் வெளியேறுவது தெரிந்தது. இருவரும் ஓசைபடாமல் பொறுப்பாளரை பின்தொடர்ந்தனர். வீட்டின் கொல்லைப்புறம் சென்ற பொறுப்பாளர், கையிலிருந்ததை அங்கொரு பள்ளத்தில் வீசியது கண்டு, “என்னடா செய்கிறாய்?” என எதிர்வீட்டுக்காரர் குரலெழுப்ப, பொறுப்பாளர் நடுங்கிப்போனார். அவருடன், பழனியப்பன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
பள்ளத்தில் வீசியதை எடுத்துப் பார்த்தார். அது அவரது மகனின் தலையாக இருந்தது. ஆம்...தந்தைக்குத் தெரியாமல் தெருக்கூத்து பார்க்கப் போயிருந்தவன், பழனியப்பன் வெளியேறியதும் அந்த இடத்தில் படுத்திருந்தான். பணத்தை கொள்ளையடிக்க வந்த அவசரத்தில் உண்மை தெரியாமல் தன் மகனையே கொன்றும் விட்டார். இந்த விஷயத்தில் ’கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது உண்மையாகி விட்டது. அங்கிருந்து பழநிக்குச் சென்ற பழனியப்பன் முருகனை தரிசித்து விட்டு பாதுகாப்பாக வீடு திரும்பினான். அழகப்பர் கண்ணீர் பெருக்கி முருகனை கையெடுத்துக் கும்பிட்டார். வசூலான பணம் முப்பதாயிரத்தில் பழநிமுருகனுக்கு அபிஷேகம் செய்து அடியார்களுக்கு அன்னதானம் அளித்தார்.
பக்தியும், தர்ம சிந்தனையும் உயிர் காக்கும் கவசங்கள்.