பதிவு செய்த நாள்
26
செப்
2018
01:09
உடுமலை;அரசுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலங்கள் மூலம் நிரந்தர வருவாய் அளிக்கும், கோவில்களை, புனரமைக்க வேண்டும், என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பழமை வாய்ந்த கோவில்கள், பராமரிப்பு மற்றும் பூஜைகள் தடையில்லாமல், நடக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. இந்த கோவில் மற்றும் நிலங்கள் பராமரிப்பு இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும், இந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம், அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு, நிரந்தர வருவாய் அளிக்கும் கோவில்களும், பராமரிக்கப்படாமல், பரிதாப நிலையில் உள்ளன.
உதாரணமாக, கோட்டமங்கலத்தில் அமைந்துள்ள வல்லக்கொண்டம்மன் கோவிலுக்கு சொந்தமான, 95க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது.
ஆனால், கோவில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல், பரிதாப நிலையில் உள்ளது. கோவிலின் எதிரிலுள்ள, பழமை வாய்ந்த சிற்பத்தூணை சுற்றிலும் காலியாக இருந்த இடம், முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில், அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், பழமை வாய்ந்த கோவிலை, புதுப்பிக்க இந்து அறநிலை யத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு ஏக்கர் பரப்பில் இருந்த கோவில், ஆக்கிரமிப்புகளால், சுருங்கி விட்டது.
பல நூற்றாண்டுகளான சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. ஏலம் விடப்படும் வருவாயில், கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க மட்டுமாவது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.