பதிவு செய்த நாள்
03
அக்
2018
10:10
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாத்மா காந்தி கோவிலில் வேண்டுவது, உடனடியாக நிறைவேறுவதாக, அங்குள்ள மக்கள் நம்புவதால், தினமும் ஏராளமானோர் அங்கு வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தின், நலகொண்டா மாவட்டத்தில், கடந்த ஆண்டு, மஹாத்மா காந்தியின், 149வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலையுடன் கூடிய கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் வேண்டுவது, உடனடியாக நிறைவேறுவதால், ஏராளமான பக்தர்கள், தினமும் கோவிலுக்கு வந்தபடி உள்ளனர்.
இது குறித்து, கோவில் பூசாரி, குரெல்லா நாராயணன் சாரி கூறியதாவது: இந்த கோவிலில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு, மாபெரும் சக்தி உள்ளது. சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், இந்த கோவிலுக்கு வந்தார். அப்போது என்னிடம், பல ஆண்டுகளாக, என் மகளுக்கு திருமணம் நடக்காமல் இருந்தது. இங்கு வந்து, மஹாத்மா காந்தியிடம் வழிபட்ட பின், என் மகளுக்கு வரன் கிடைத்தது என்றார். இவ்வாறு பல பக்தர்களின் வேண்டுதல்களை, மஹாத்மா காந்தி நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
காந்தியின், 150வது பிறந்த நாளை ஒட்டி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், அவருக்கு இரண்டாவது கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலை, ஆந்திர மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு, நேற்று திறந்து வைத்தார். இந்த கோவிலை, சுதந்திர போராட்ட தியாகிகளான, ராம்பில்லா சையத் அப்பாலாசாமி, கோல்லா நாராயணா ராவ் ஆகியோரின் பேரக் குழந்தைகள் கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.