வத்திராயிருப்பு வடக்காச்சியம்மன் கோயிலில் மதுப்பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2018 01:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் தேரோட்ட விழாவிற்கு முன்னோட்டமான வடக்காச்சியம்மன் கோயிலில் மதுப்பொங்கல் விழா நடந்தது.
வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா. ஒருவாரம் நடக்கும் இவ்விழா கலைவிழாவுடன் துவங்கும். திருவிழாவிற்கான முன்னோட் டமாக ஊரின் வடக்கு எல்லையில் வடக்காச்சியம்மன் கோயிலில் மதுப்பொங்கல் விழா நடைபெறும். இதில் மதுக்கலயம் என்ற மண் கலயத்தில் பல்வகை மாவுகளை கரைத்து மதுக்கலவை செய்து அதனை அக்கலயத்தில் ஊற்றி வைப்பார்கள்.
விரதம் மேற்கொண்ட பருவமடையாத பெண் குழந்தையை அழைத்து அக்கலயத்தை தலை யில் வைத்து கோயிலை மூன்று முறை சுற்றிவரச் செய்வார்கள். அதன்முடிவில் கலயத்தில் உள்ள மதுக்கலவை பொங்கி வழியும்.
பொங்கினால் மழைபெய்யும் என்பதும், பொங்கவிட்டால் அந்த ஆண்டு வறட்சி நிலவும் என்பது ஐதீகம். பாரம்பரிய வழிபாட்டு முறைகளை கொண்ட இவ்விழா நேற்று (அக்., 2ல்) கோயிலில் கோலாகலமாக துவங்கியது.
அதிகாலையில் அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகங்களுடன் வழிபாடு நடந்தது. பெண்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இரவு நடந்த மதுக்கலய வழிபாட்டில் மது பொங்கி வழிந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து நடுஇரவில் முத்தாலம்மன் திருவிழாவிற்காக பறைசாற்றும் விழா நடந்தது. கோயில் செயல்அலுவலர் சுந்தர்ராஜன், முத்தாலம்மன் பக்தர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.