கீழக்கரை:ஏர்வாடியில் உள்ள தொத்தமகன்வாடி பத்திர காளியம்மன் கோயிலின் மூன்றாம் ஆண்டு முளைக்கொட்டு விழா கடந்த செப். 23 அன்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று (அக்., 3ல்) மாலை 4:00 மணியளவில் முளைப்பாரி ஊர்வலத்தின் முன்பு அம்மன் கரகம் சென்றது.
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவினுள் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை சுமந்து சென்ற பக்தர்களுக்கு, தர்கா ஹக்தார் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தர்காவின் முன்புறம் பாரிகள் இறக்கி வைக்கப்பட்டு,கும்மி, கோலாட்டம் நடந்தது.
மூன்று முளைப்பாரிகளை தர்காவின் உள்ளே மக்பரா அமைந்துள்ளஇடத்தில் வைத்து, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் செய்யது இப்ராகீம் (பாத்தியா) சிறப்பு துஆ ஓதினார். தர்காவை மூன்று முறை முளைப்பாரி சுமந்து வலம் வந்தனர். சின்ன ஏர்வாடி கடற்கரையில் பாரிகளை கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொத்தமகன் வாடி நாடார் உறவின்முறைத் தலைவர் பூவன், நிர்வாகிகள் நீலமேகம், மங்கள சாமி,கொப்புளான், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை சத்திரிய இந்து நாடார் சங்க விழாக்குழுவினர் செய்தனர்.