பதிவு செய்த நாள்
04
அக்
2018
02:10
வேதங்கள் ஏன்? வேதங்கள் எனின் அஃது யாது?
வேதங்கள் வேண்டுமா?
உலகிற்கும் உலக உயிர்கட்கும் வேதங்கள் யாது கூறுகின்றன?
வேதங்களைத் தந்தவர்கள் யார்?
""ஒழுக்கம் அன்பு அருள் ஆ சாரம் உபசாரக உறவுசீலம்
வழுக்கிலாத் தவம் தா னங்கள் வந்திதல் வணங்கல் வாய்மை
அழுக்கிலாத் துறவுஅடக்கம் அறிவொடர்ச் சித்தல் ஆதி
இழுக்கிலா அறங்கள் ஆனால் இரங்குவான் பணிஅறங்கள்
அமரகவி பாரதி கூறியது போல நமது இந்திய நாட்டுக்குள் மிகப்பெரும் சிறப்பு வேதங்களே! எந்த உலக நூல்களும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வதற்காகவே நமக்கு வேதங்கள் கிடைத்தன. வேதத்திலிருந்தே. அதன் சிறப்புகளை அறிந்தே பலர் மற்ற மத நூல்களுக்கும் வேதத்தையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உலகம், கடவுள், உயிர்கள் அத்தனைக்கும் தேவைப்படும் ஒன்றே வேதம். மனிதர்களை நெறிப்படுத்தவும், கொள்கைகளை வகுக்கவும், அறநெறி வழியை நேரடியாக மனிதத்திற்குள் செலுத்தவும் வேதம் மட்டுமே முழுதுணை புரிகிறது என்றும் எங்கும் நிலைத்து நிற்பதும், அழிவில்லாததுமான ""உண்மையின் விளக்கமே வேதம்.
வேதங்கள் யாராலும் எழுதப்படவில்லை. அது எனது எனக் கூற எவருமில்லை. மனிதன் இறைவனைத் துருவித்துருவி ஆராய முற்பட்டு பல கோடி காலங்கள் விடா முயற்சியின் பலனாக வேதத்தை பிரபஞ்சத்திலிருந்து ஒலிவடிவமாக ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், கேட்டுணர்ந்தார்கள். விண்ணிலிருந்தே கேட்டுணரப்பட்ட வேதத்தின் காலம் பற்றி எவரும் கூறப்புகுவதில்லை. அது சனாதனம் என்றுமிருப்பது. வேதகாலம் என்று எதுவுமில்லை. அவரவர்கள் அவரவர்கள் காலத்தில் அது பற்றி அறிந்து கொண்டது மட்டும் உண்மை. மனித சமுதாயம் அதைப் பயன்படுத்திக் கொண்டதற்கு உள்ள காலங்களை மட்டுமே சிறிது அறிந்து கொண்டவர்கள் அக்காலங்களை தாம் அறிந்து கொண்டதிலிருந்து அதை வெளிப்படுத்தி பயன்படுத்திக் கொண்டதற்கு வேண்டுமானால் காலங்களைக் கூறலாம்.
வேதங்கள் விண்ணிற்கும் மண்ணிற்கும் உடைய உடமையாகும். தரும நெறி, கோட்பாடு அனைத்திற்கும் அனைவர்க்கும் ஆவதாம். சிறுமைகள், தவறுகள், வகுப்பு, குறுகிய தேசீய மனப்பான்மை இவைகளைக் களைந்து பரந்து நோக்கத்துடன் செயல்பட ஏற்பட்ட நூல் வேதம் என்றால் மிகையாகாது என காலஞ்சென்ற மேதாவி டாக்டர் ஜயகர் குறிப்பிட்டார். நமக்கறியும்படி நாமறிந்து கொண்ட வரலாறு கூறப்புகுவோமானால் சங்க காலங்களி லிருந்து தமிழன் வேதம், வைதீக மதம் இவைகளைப் பேணி வளர்த்து வந்திருக்கிறக்கிறான். அரசர்களும், கவிஞர்களும், கொடையாளர்களும், பாமர மக்களும் வேதத்தையும், வைதீக மதத்தையும் பேணி வளர்த்து வந்து இருக்கிறார்கள். தமிழனின் பண்பாடு நாகரீகம், கலை, விஞ்ஞானம், வேதாந்தம், மதம் இவைகளோடு வேதம் ஒன்றாகக் கலந்து விட்டது. சமையாச்சாரியர்களான ஆழ்வார்களும், நாயன்மார்களும் தங்கள் நூல்களில் வேதத்தை மிகவும் புகழ்ந்து பேசி விட்டார்கள்.
உண்மையில் வேதம் ஒரு உயர்ந்த நூல். அதனை முதலில் அறிந்தவர்கள் அறிந்த மொழி சமஸ்கிருதம். செம்மைப்படுத்தப்பட்ட மொழி என அதனைக் கூறுகிறார்கள். இயற்கையை அதன் எல்லா ஒலி, ஒளி போன்ற அனைத்தையும் பிரதிபலிப்பதாய் அமைந்தது எனக் கூறுவதே பொருத்தம். ""சப்தம் ஒலிக்கு ஒலி இலக்கணம் சமைத்தவர் பாணிணி மஹரிஷி என்பார்கள். அதற்கு எளிய வகையில் புரிந்து கொள்ளும்படி பாஷ்யம் எழுதியவர் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியாவார்.
உண்மையிலேயே வேதம் ஒரு உயர்ந்த நூல் சமஸ்கிருத சாஸ்திரங்களிலுள்ள ஸ்மிருதி இதிகாச புராணங்களிலும் கொண்டாடப்படும் நூல். சைவத்திற்கு வேதம் செய்துள்ள உபகாரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. பஞ்சாட்சரம் வேதம் கொடுத்தது. சிவ வழிபாட்டில் பல அம்சங்கள் வேதங்களை அடிப்படையாக கொண்டவை. வேதம் என்ற வார்த்தை ""தெரிவிப்பது என்ற பொருளில் வந்துள்ளது. மனித வர்க்கத்திற்கு தேவையான அம்சங்களைத் தெரிவிப்பதால் இதற்கு வேதம் என்று பெயர் வந்தது. இது மந்திரம் பிராம்மணம் என்ற இருவகையாகப் பிரிந்து உள்ளது.
மந்திரம் என்ற பாகம் கடவுள்களை இறைஞ்ச ஏற்பட்டது. ப்ராம்மண பாகம் மந்திரங்களுக்கு விரிவுரை போலுள்ளது. வேள்விகளைப் பற்றி பூரணமான விளக்கங்களை ப்ராம்மணங்களில் பார்க்கிறோம். கடவுளைப் பற்றி பேசும் காலத்திலும், கன்மாக்களைப் பற்றிப் பேசும் காலங்களிலும் வேதம் பல கதைகளைச் சொல்கின்றன. கடவுள் தத்துவத்தையும் வேதாந்த கருத்துக்களையும் விளக்கும் வேத பாகத்திற்கும் ""உபநிடதம் என்று பெயர்.
ஜீவாத்மா, பராமத்மா, பிரபஞ்சம் இவைகளின் உண்மை நிலையைப் பற்றி த்வைதம், அத்துவைதம் விசிஷ்டாத்துவைதம், பேத அபேத சித்தாந்தம், சுத்த அத்வைதம் முதலிய வேதாந்தக் கருத்துக்கள் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டவை. இவ்விதம் வேதமானது ரிக் வேதம், யஜீர் வேதம், ஸாம வேதம், அதர்வ வேதம் என்று நான்காகப் பிரிந்துள்ளது. ரிக்வேத மந்திரங்கள் செய்யுள் நடையில் அமைந்துள்ளன.
யஜுர் வேத மந்திரங்கள் வசன நடையில் அமைந்துள்ளன. இசைக்குத் தகுந்தாற் போல அமைந்துள்ள ரிக் மந்திரங்களை ஸாம மந்திரங்களாயின. அதர்வ வேதம் ரிக் வேதம் வகையைச் சேர்ந்தது. ரிக் வேதம் கடவுளைப் பிரதானமாகக் கொண்டது, யஜுர் வேதம் கடவுளை வழிபட ஏற்பட்டுள்ள கர்மாக்களைப் பிரதானமாகக் கொண்டது. அதர்வ வேதம் கடவுளை வழிபடும் மனிதனுடைய வாழ்நாளுக்குத் தேவையான அம்ஸங்களை வெளியிடுகிறது. மானிட வர்க்கத்திற்கு உதவி செய்வது வேதத்தின் நோக்கம். இக வாழ்க்கையிலும் பர வாழ்க்கையிலும் வேதம் உதவுகிறது. சமூகப் பொருளாதார அரசியல் வாழ்க்கைக்கு உதவி செய்வதின் மூலம் வேதம் இம்மையிலும், மறுமையிலும் மனித வர்க்கத்திற்கு செய்யும் உபகாரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. மறுமையில் ஆன்மா ஆண்டவனை அடைவதற்குண்டான வழிகளையும் அடுத்த ஜென்மாவில் ஷேமத்தை அடைவதற்குண்டான வழிகளையும் வேதம் விளக்குகிறது.
பௌத்த மதம் போல இக வாழ்க்கையை வேதம் உதாசீனம் செய்யவில்லை. இக வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை நடத்தும் வழியையும் விவரித்துக் கூறுகிறது. இக வாழ்க்கை உலகாதாய வாழ்க்கை அல்ல. இம்மை தெய்வத்தின் அருளால் நடைபெறுகிறது என்பதே வேதம் காணும் அடிப்படையாகும். வாழ்க்கையில் அனுபவத்தின் ஒவ்வொரு சிறிய அம்ஸமும் தெய்வத்தையே நம்பி உள்ளது என்று வேதம் தெரிவிக்கிறது.
சமுதாய வாழ்க்கையைப் பற்றிப் பேசும் வேதம், ஆண், பெண் உறவிலிருந்து உலகம் வரை பேசுகிறது. மனித வர்க்கத்தின் ஒற்றுமையில் வேதத்திற்கு அபாரமான கவலை உண்டு. சேர்ந்து வாழ்வதென்பது மனிதப் பண்பாட்டின் அடிப்படை. இது மிருகங்களுக்கு மனதின் அடிப்படை அறிவு என்பதின் மூலம் இது சாத்தியமில்லை. பாசம், பண்பு என்பதும் கிடையாது. திணிக்கப்பட்ட குறைந்த கால உணர்வின் மூலமே அவைகள் சேர்ந்து வாழும். சேர்ந்து வாழ்வதை வேதம் வலியுறுத்துகிறது. வற்புறுத்துகிறது.
அதர்வ வேதத்தில் ""பூமி சூக்தம் உலகத்தைப் பற்றிப் பேசுகிறது. அங்கு குறிப்பிடப்படும் கருத்துக்கள் கவனத்திற்குரியவை. ""ஜனம், பிப்ரதி, பஹூதா, விவாசஸம் நா நாதர் மாணம் என்று கூறுகிறது. இதன் கருத்து உலகின் பலவித மக்கள் இருந்து வருகிறார்கள். பலவித மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. பலவிதமான நாகரீகங்களும் இருந்து வருகின்றன. எல்லாம் அவசியமானவைகளே. அந்தந்த இனத்திற்கும், மொழிக்கும் நாகரீகத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒரு இனம் மற்றொரு இனத்தை அழிக்க முற்படக்கூடாது மற்றும் ஒரு மொழி மற்றொரு மொழியை அழிக்க முற்படக்கூடாது என்று வேதம் கூறுகிறது. இன வெறியம், மொழி வெறியும் வேதத்தின் கொள்கைக்கு எதிரானது.
அவ்விதமே ஒரு அதர்வண வேத மந்திரம். பலவித மதங்கள் உலகத்தில் இருந்து வரும் என்றும் அவைகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று கூறக்கூடாது என்றும், எல்லாம் கடவுளை அடையும் மார்க்கம் என்றும் கூறுகிறது. இனவெறி மொழி வெறிகளை வெறுப்பது போல் மதவெறியையும் வேதம் வெறுக்கிறது. மனிதப் பண்பாட்டிற்குத் தேவையான இனம், மொழி, நாகரீகம், மதம் இவைகளில் பரந்த நோக்கத்தோடு பேசும் பெருமை வேதத்திற்கு உண்டு. கடவுளைத் துதித்துப் பிரார்த்திக்கும் போதும் வேதம் குறுகிய மனோபாவத்தோடு பேசுவதில்லை. உலகமே வாழ வேண்டும் என்று தான் பேசுகிறது. ஸ்ரீ ருத்ரத்தில் உலகம் ஒரு விதமான பிணியும் இல்லாமல் வாழ வேண்டுமென்று கூறுவது மிகவும் கவனிக்கத் தகுந்தது. சமுதாய வாழ்க்கையின் அடிப்படையான மணமக்கள் வாழ்க்கையையும் வேதம் விவரித்துக் கூறுகிறது.
மனிதனின் பொருளாதார வாழ்க்கையில் வேதத்திற்கு உள்ள சிரத்தை தனிக்கவனம் அபாரமானது. பிறந்தவர்கள் எல்லோரும் வாழ வேண்டும். ஆகாராதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. சுகமாக வாழவே எல்லோரும் பிறந்துள்ளனர் என்ற கொள்கை வேதத்தைச் சார்ந்தது. ஒரு அதர்வ வேத மந்திரம், எல்லோருக்கும் அன்னம் உணவு கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. மனிதனின் பொருளாதார வாழ்க்கைக்கு அடிப்படையான ""மழையைப் பற்றி வேதம் பேசாத இடம் கிடையாது. அரசு இயல் கொள்கையிலும் வேதம் உயர்ந்த கருத்துக்களை வெளியிடுகிறது.
வேத அரசியலில் மக்களின் அபிப்ராயத்திற்கே முக்கியத்துவம் உண்டு. ஆனால் வர்க்கம் யாராக இருந்தாலும் பொதுஜன அபிப்பராயம் மாறிவிட்டால் பதவியை விட்டு விலகிவிடல் வேண்டும் என்றும் கூறுகிறது. ஜனநாயகம் என்ற வார்த்தையை உலகிற்கு அளித்த பெருமை வேதத்திற்கு உண்டு. அதை ""ஜன ராஜ்யாய என்கிறது. தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையைத் திருத்தி மனிதப்பண்பாட்டோடு வாழ வேதம் அறநெறியை வற்புறுத்துகிறது.
மனுஷியாவை கர்ம அறநெறியில் வாழாவிட்டால் மனிதன் மனிதனல்ல என்று கூறுகிறது. நருதேச்ராந்தஸ்ய ஸக்யாய தேவா சோம்பேறியாக வாழக்கூடாது என்றும் கூறுகிறது. மனிதன் தன் உழைப்பினாலேயே வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாத குணம் என்றும் வேதம் கூறுகிறது.
வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் ஏட்டுச்சுரைக்காய்களல்ல. ஜீவ களையுள்ளவை உயிரோட்டமுள்ளது வேதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அதன் உயர்ந்த கருத்துக்களை இன்றும் செயல்படுத்தி வருகிறார்கள். சைவ சமயாச்சரியரான திருமூலர் வேதத்தின் கருத்துக்களின் பெருமையை மனதிற் கொண்டுதான் ""சித்தத்தினுள்ளே சிறக்கின்ற நூல்கள் எல்லாம் உத்தமமாக ஓதிய வேதத்துள் என்று கூறுகிறார். மனித வாழ்க்கை சம்பந்தமாக எல்லா அம்சங்களையும் வேதம் பேசுவதால் வேதம் ஒரு முழு நூல். பைபிள் போல அது ஆத்ம குணத்தை மட்டும் வற்புறுத்தவில்லை. புத்தர் போல துறவறத்தை மட்டும் வற்புறுத்தவில்லை. திருமூலர் வேதத்தை விட்டால் அறன் இல்லை. ""வேதத்தில் ஓதத் தரும் அறம் எல்லாம் என்று கூறுவது முற்றிலும் அடிப்படையாகக் கொண்டது. மனித வாழ்க்கையை மனதில் கொண்டு பேசும் வள்ளுவர் பெருமான் வேதத்தில் ஈடுபட்டுப் பேசுகிறார். ""ஆ பயம் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் என்று கூறுவது கவனிக்கத் தகுந்தது. அறுதொழிலோர் நூல் என்பது வேதத்தைக் குறிப்பிடுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் அணிகலமாக விளங்குகிறது. கடவுள் நம்பிக்கை, கடவுள் வழிபாடு இவைகளை எடுத்துவிட்டால் தமிழன் பண்பாடு இல்லை என்றே கூறலாம். தமிழன் பண்பாட்டின் சரித்திரமே மதத்தின் சரித்திரம் என்று கூறுவது மிகையாகாது.
கடவுளைத் தென்னாட்டவராகவும் பாண்டிய நாட்டினராகவும் மாணிக்க வாசகர் கூறுவதும், தமிழ்நாட்டினருக்குக் கடவுளிடம் உள்ள அளவற்ற பக்தியைத் தெரிவிக்கிறது. மதுரையில் அம்மை மீனாக்ஷியாகப் பிறந்ததும் அப்பன் சுந்தரேஸ்வரராகப் பிறந்ததும் தமிழனின் பண்பாட்டிற்கே ஏற்பட்டுள்ள பெருமை. வடமதுரையில் (மதுரா) கிருஷ்ண பரமாத்மா பிறந்தார். தென் மதுரையில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்கள் பிறந்தார்கள். திருவிளையாடற் புராணம் மதுரைக் கடவுளின் லீலைகளைத் தெரிவிக்கின்றது. தமிழ் இலக்கியமே கடவுள் இலக்கியம் என்று கூறலாம். வேதத்தில் காணப்படும் கடவுள் தத்துவம் கருத்து நிறைந்ததாக இருப்பதால் தமிழ் நூல்கள் அதை ஏற்றிப் பேசுகின்றன. பரிபாடல் முதல் இன்று வரையில் உள்ள தமிழ்நூல்கள் அதை ஏற்றிப் பேசுகின்றன. பரிபாடல் முதல் இன்றுவரையில் உள்ள தமிழ் நூல்கள் கடவுளை வேத முதல்வன் என்று போற்றிப் பேசுவது கவனிக்கத்தக்கது.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் கடவுளை முழுவேதத்வமுதம் என்று போற்றிப் பேசுகிறார் கள். வேதக்கடலில் ஆழந்து கடவுள் கருத்தை அடியார்கள் எடுத்திருப்பதால் தமிழ்நாட்டின் கடவுள் தத்துவம் முழுவதும் வேதமயமானதாகவே விளங்குகிறது. வேதத்தில் பல கடவுள் தத்துவத்திற்கு விளக்கங்களையும் தமிழ்நூல்களில் பார்க்கிறோம். பாண்டிய நாட்டின் அரசனான பல்யாகசாலைப் பெரு வழுதி பல யாகங்களைச் செய்திருக்கிறான். வேள்விக்குடி தாமிர சாசனமே இதற்குத் தகுந்த சான்று. திருஞானசம்பந்தர் வேத வேள்விகளை நிந்தனை செய்து உழல்பவர்களை வெல்லவே ஆலவாயன் அவதரித்துள்ளான் என்று கூறுகிறார். திருஆலவாய் எம்பெருமான் வேதத்தையும், வேதநெறிகளையும் பாதுகாக்கவே ஏற்பட்டுள்ள கடவுள். அவனிடம் வேதம் வாழ வேண்டும். வைதீக நெறி வாழ வேண்டும் என்று வேண்டுவோம். வேதம் வாழ்ந்தால் தான் உலகம் வாழும். வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத்துறை விளங்க ஞான சம்பந்தர் அவதரித்தார்.
இந்த மதுரை மாநகரிலே வேதநெறி தழைக்கும்படியும் செய்தார். மதுரைக்கும் வேத நெறிக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு என்றோம். தமிழ்நாட்டின் இருபெரும் சமயங்கள் - சைவமும், வைணவமும் இரண்டையும் தமிழ்நாட்டுக்கு அளித்த பெருமை வேதத்திற்கு உண்டு.
வாழ்க அந்தணர் வானவர் ஆவினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமுந் துயர் தீர்கவே
திருச்சிற்றம்பலம்