பதிவு செய்த நாள்
06
அக்
2018
12:10
திருப்போரூர்: திருப்போரூர் பிரணவமலை கைலாசநாதர் கோவிலுக்கு, பக்தர்கள் வருகையை அதிகரிக்கும் விதத்தில், அறநிலையத்துறையில் மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என, முருகப் பெருமானை கவுரவிப்பர். ஆனால், திருப்போரூரில் இருக்கும் குன்றில், கந்தசுவாமிக்கு பதில், அவரின் தந்தையான, கைலாசநாதர் - பாலாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.பிரணவ மலையில் உள்ள கைலாசநாதர் கோவில், சங்க கால பழமையான கோவிலாக கூறப்படுகிறது. சிறப்பு மிக்க இக்கோவில், கந்தசுவாமி கோவிலின் துணைக்கோவிலாக உள்ளது. கடந்த, 2010ம் ஆண்டு இவ்வூர் உபயதாரர் மூலம், கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், சமூக விரோத செயலை தடுக்கும் வகை யிலும், மலை கோவிலை சுற்றிலும் இரும்பு கம்பி வலை அமைத்தல், நுழைவாயில் பகுதியில் கேட் மற்றும் பாதுகாவலர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.மேலும், பராமரிப்பிற்கு துப்புரவு பணியாளர்கள், முறையான கோவில் நடை திறப்பு, அர்ச்சகர் நியமிக்கபடவும் இல்லை. வெளியூர் பக்தர்கள் மலையேறி சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, அறநிலையத் துறையினர் இக்கோவிலை மேம்படுத்த வேண்டும் என, பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டிற்கு வருகின்றனர். கந்த சுவாமி கோவில் நிர்வாகம், இக்கோவிலுடன் தொடர்புடைய பிரணவ மலை, சிதம்பர சுவாமிகள் மடத்திற்கு பக்தர்கள் வர வசதிகளை அதிகரிக்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.