பதிவு செய்த நாள்
06
அக்
2018
12:10
விருதுநகர்: அம்மனுக்கு மரியாதை செலுத்துவதின் மூலம் குடும்பம் தலைக்கவும், நல்ல மழை பெய்து, நாடு செழிக்க செய்யும் நோக்கில் அம்மன் தெய்வதிற்கு வழிபாடு நடத்தும் மாதமாக புரட்டாசி விளங்குகிறது. சரஸ்வதி பூஜைக்கு முந்தைய 9 நாட்கள் பெண்கள் கொலு வைத்து நவராத்திரி விழா கொண்டாடுவர். இந்த ஆண்டு அக்.,10ல் துவங்கும் நவராத்திரி விழாவிற்காக பெண்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்தும் 9 வித படிகள் அமைத்து அவற்றில் கொலு பொம்மைகளை அடுக்கி வருகின்றனர்.
நவராத்திரி பூஜைகள்: நவரச சக்திகள் மூலம் அனைத்து சக்திகளையும் பெறும் நோக்கில் வீடுகளில் ஒவ்வொரு நாளும் ராஜேஸ்வரி, காமாட்சி, துர்கை, சரஸ்வதி உட்பட 9 வித அம்மன் அலங்காரங்கள், சிறப்பு அபிஷேகம், நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு படைத்து மகிழ்வர். இதற்காக தனி ரேக்குகள் அமைத்து முதல் ரேக்கில் கும்பம், அம்மன் சிலைகள், 2 வது ரேக்கில் சுவாமிகளின் அவதாரங்கள் அடங்கிய செட் பொம்மைகள், 3 வது ரேக்கில் தவழும் குழந்தை, திருமண செட், 4 வது ரேக்கில் துறவிகள், முனிவர்கள் பொம்மைகளை வைக்கப்படும்.
இது போன்று ஒவ்வொரு ரேக்கில் பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவர். இவற்றிற்கு முன்பாக சிறிய தெப்பக்குளம் போல் அமைத்து அதில் நவதானியங்களை போட்டு முளைப்பாரி வளர்ப்பர். 9 வது நாளில் நவராத்திரி பூஜையை நிறைவு செய்யும் விதத்தில் சரஸ்வதி அலங்காரம் செய்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வணங்குவர். அன்றைய தினம் கொலு நடத்துவோர் பெண்களை அழைத்து சேலை, பிளவுஸ், வளையல், பிரசாதம் அளித்து மகிழ்வர். பெண்கள் மட்டுமின்றி நவராத்திரி கொலு பொம்மைகளை பார்த்து ரசித்து, அங்கு கிடைக்கும் பிரசாதத்தை வாங்கி அம்மனின் அருளை பெற்று வர குழந்தைகளும் ஆர்வம் காட்டுவர்.
மன நிம்மதி கிடைக்குது நவராத்திரியில் பெண் தெய்வங்களுக்கு சிறப்பு செய்வதால் குலம் வளர்வதோடு, திருமண, குழந்தை தடை விலகுவதோடு, அனைத்தும் கூடிவரும். தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தி குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்குவதை கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். இதன் மூலம் கொலுவை காணவரும் பக்தர்களுக்கு அம்மனின் அருள் கிடைப்பதோடு, எங்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும்.
-
என்.காயத்ரி, சுலோச்சனா தெரு, விருதுநகர் சுவாமிகளின் வரலாற்றை... பாட்டி காலத்தில் இருந்தே நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடத்துகிறோம். நவராத்திரி பூஜையன்று மூத்தவர்கள் ஒவ்வொரு பொம்மைகளையும் குழந்தைகளுக்கு காட்டி, அந்த சுவாமிகளின் வரலாற்றை எடுத்து கூறும் போது நம் கடவுள்களின் மகிமையை குழந்தைகள் அறிய வாய்ப்பு கிடைக்கும். மதுரை விளாச்சேரி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, மயிலாடுதுறையில் களிமண்ணால் தயாராகும் கொலு பொம்மைகளை பயன்படுத்தி தான் பூஜைகள் செய்வோம்
-எஸ்.வாணிஸ்ரீ, விருதுநகர் அம்பாளின் சக்தி அறிய வாய்ப்பு கடந்த 10 ஆண்டாக நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து அம்பாளுக்கு வழிபாடு நடத்தி வருகிறோம். கொலு பொம்மைகளை குழந்தைகள் பார்ப்பதின் மூலம் நமது பக்தியின் மாண்பு, அம்பாளின் சக்தி குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.