பதிவு செய்த நாள்
09
அக்
2018
11:10
திருச்செங்கோடு: திருப்பதியில், நாளை நடக்கவுள்ள பிரம்மோற்சவ திருவிழாவுக்கு, 9 டன் பூமாலைகள், திருச்செங்கோட்டிலிருந்து அனுப்பப்பட்டன. திருமலை திருப்பதியில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ திருவிழா நடக்கும். அதன்படி இந்தாண்டு, இரண்டாவது பிரம்மோற்சவ திருவிழாவாக, நவராத்திரி பிரம்மோற்சவம், நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவில், திருமலை தேவஸ்தானத்தை அலங்கரிக்க, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அகரமஹால் திருமண மண்டபத்தில் சம்பங்கி, தாமரை, மரிக்கொழுந்து, மஞ்சள் , சிவப்பு, சாமந்தி உள்ளிட்ட, 9 டன் எடையுள்ள பூக்கள் மாலைகளாக தொடுக்கப்பட்டன.அவற்றோடு கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, இளநீர், பாக்கு குலை, மாங்கொத்து, 10 ஆயிரம் ரோஜா செடிகள் ஆகியவையும், நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
பழநி கோவில்: திண்டுக்கல் மாவட்டம்பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம், பழநி மாரியம்மன்கோவிலில் இருந்து, திருப்பதிக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சபா நிர்வாகி மருதசாமி கூறுகையில், வாடாமல்லி, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அனுப்பி வைக்கிறோம். திருப்பதிக்கு பூக்கள் அனுப்ப விருபுவோர், 94434 03026 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.