பதிவு செய்த நாள்
09
அக்
2018
11:10
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும், பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் போராட்டம் நடக்கிறது. கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து ஹிந்து பெண்களும் ஒருங்கிணைந்ததை பார்த்து, கேரள மார்க்சிஸ்ட் அரசு மிரண்டு போய் உள்ளது. இதற்கு பின்புலமாக இருப்பது ‘ரெடி டூ வெயிட்’ (ready to wait) என்ற பெண்கள் அமைப்பு. கடந்த 10 நாட்களில் ஏராளமான பெண்கள், சமூக ஊடகம் வழியாக இதில் இணைந்துள்ளனர்.
இந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான பத்மா பிள்ளை நமது நிருபரிடம் கூறியதாவது: சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. என்றாலும், 2016 ல் மகாராஷ்டிராவில் கோயில் ஒன்றில் பெண்களை அனுமதிக்கும் பிரச்னை வந்த போது, ஹிந்து மத நம்பிக்கைகளை காக்க வேண்டும், பாரம்பரிய வழிபாட்டு முறையை கடைப்பிடித்து பண்பாட்டை காக்க வேண்டும் என நாங்கள் 10 பெண்கள் சேர்ந்து இந்த அமைப்பை துவக்கினோம். எங்களது நோக்கம், பெண்கள் 50 வயது வரை காத்திருந்து, சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பதே. இந்த அர்த்தத்தில் ‘ரெடி டூ வெயிட்’ என அமைப்பிற்கு பெயர் வைத்தோம். சபரிமலை கோயில் விதிகளுக்கும், ஐதீகத்திற்கும் மாறாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க கூடாது என எங்கள் போராட்டத்தை சமூக ஊடகங்கள் வழி துவங்கினோம்.
கேரள அரசின் முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதற்காக ஷில்பா, அஞ்சலி, ஐஸ்வர்யா என்ற மூன்று பேரைக்கொண்ட ‘பீப்பிள் பார் தர்மா’ என்ற டிரஸ்ட் அமைத்தோம். வழக்கில் எங்களையும் இணைத்தோம். நாங்கள் விரும்பியதற்கு மாறாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. கேரள அரசும், தன்னாட்சி அமைப்பான கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்றதும் போராட்டத்தை துவங்கினோம். ஐயப்பன் பிறந்த பந்தள மன்னர் குடும்பத்தினரோடு இணைந்து ‘ஐயப்பன் நாம ஜெப யாத்திரை’ என்ற அமைதி போராட்டத்தை நடத்தினோம். ஒரு ஊரை தேர்வு செய்து, அங்கு ஒரு கோயிலில் இருந்து மற்றொரு கோயிலுக்கு ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம் எழுப்பியவாறு ஊர்வலம் செல்கிறோம். சர்வ கட்சியை சேர்ந்த பெண்கள், பிராமண சபா, நாயர் சர்வீஸ் சொசைட்டி, தாழமண் தந்திரி குடும்பத்தினர் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். சங்கனாச்சேரி, பந்தளம், எருமேலி, திருப்பூணித்துறா, நிலக்கல் என பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது. எங்கள் அமைப்பு ஆரம்பித்தாலும், இப்போது ஹிந்து பெண்களின் போராட்டமாக மாறிவிட்டது.
கேரள அரசு பிற மத விவகாரங்களில் தலையிடுவது இல்லை; ஹிந்து கோயில்களின் நம்பிக்கையில் ஏன் தலையிட வேண்டும். எங்கள் நம்பிக்கையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் ஏன் உங்கள் கொள்கைகளை எங்களிடம் திணிக்கிறீர்கள்? கோயில் விரதம், நம்பிக்கை, ஐதீகம் பாதுகாக்க போராடுகிறோம் என்பதற்காக நாங்கள் ஆணாதிக்கத்தின் அடிமை அல்ல; மத விஷயத்தில், ‘பெண்கள் சமத்துவம்’ என்பது தேவை இல்லை. கோயிலின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ‘கோயில்கள் பொது இடங்கள் அல்ல’ என பார்லிமென்ட்டில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளை வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.
நடிகை ரஞ்சனி: ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் நடித்த ரஞ்சனி இந்த அமைப்பில் உள்ளார். அவர் எர்ணாகுளம் பிரஸ்கிளப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:
நமது பண்பாடு, பாரம்பரியம் அழிந்து வருகிறதோ என்று கவலை ஏற்பட்டுள்ளது. கோயிலில் பெண்களுக்கு சம உரிமை தருவது எல்லாம் சரி; ஆனால் அது மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வேண்டாம். கோயிலில் உரிமை கேட்பவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டுகொள்வது இல்லை. பெண்கள் சமத்துவம் பெற வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. மதநம்பிக்கையை நாம் மதிக்க வேண்டும். கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு, மத நம்பிக்கையை காக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். எனவே மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற அமர்வில், தென்மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகள் இருந்திருந்தால் அவர்களுக்கு சபரிமலையின் தனிச்சிறப்பு தெரிந்திருக்கும். இவ்வாறு கூறினார். ‘ரெடி டூ வெயிட்’ அமைப்பிற்கு ஆதரவு தெரவிக்க facebook: #ReadyToWait என்ற ‘குரூப்பை’ தொடர்பு கொள்ளலாம்.