பதிவு செய்த நாள்
07
பிப்
2012
01:02
சென்னை : தமிழக இந்து சமய அறநிலையத் துறையால், கோவில்களில் அமல்படுத்தப்பட்டுள்ள அன்னதான திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க, திடீர், "ரெய்டு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், திக்குமுக்காடி உள்ளனர்.
அன்னதான திட்டம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், 2002 மார்ச் 23ல், முதன்முறையாக சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், அன்னதான திட்டம் துவக்கி வைக்கப்பட்டது; அதன்பின், 362 கோவில்களில் திட்டம் விரிவாக்கப்பட்டது. தற்போது, 106 கோவில்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, சாப்பாடு தயாரிப்பு செலவு, நபருக்கு, 20 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு: இந்நிலையில், கோவில்களில் இத்திட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டு, பக்தர்கள் பயன் பெறுகின்றனரா என்பதை அறிய, மாவட்ட உதவி கமிஷனர், மண்டல இணை கமிஷனர் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையை கோவில் உதவி கமிஷனர், நிர்வாக அதிகாரியின் கையொப்பம் பெற்று, அறநிலையத் துறை கமிஷனருக்கு தகவல் அளிக்கவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவில்களில் அதிகாரிகள் அடிக்கடி, "ரெய்டு மேற்கொள்வதால், இந்த திட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சுருட்டி வந்த ஊழியர்கள், தற்போது திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.
எச்சரிக்கை: இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் ஒருவர் கூறியதாவது: சமையல்கூடத்தில் சுகாதாரத்தன்மை, சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு நடத்தி தவறுகள் இருப்பின், அதை சுட்டிக் காட்டி, கோவில் அதிகாரியின் ஒப்புதலுடன் அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு ஆய்வு நடத்தாத அதிகாரிகள், ஆய்வின் உண்மைத் தன்மையை மறைக்கும் அதிகாரிகள், கோவில்களில் சுகாதாரம் பேணாத அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.