பதிவு செய்த நாள்
07
பிப்
2012
12:02
மதுரை :மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா இன்று(பிப்.,7) நடக்கிறது. அம்மனும், சுவாமியும் காலையில் இருமுறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தில் சுற்றி வருகின்றனர். இதையொட்டி, முதன்முறையாக கோயில் சார்பில், இன்றிரவு 7 மணிக்கு, மைய மண்டபத்திலிருந்து லேசர் ஒளியில் சுவாமியின் லீலைகள் குறித்த காட்சிகள், இயற்கை காட்சிகளையும் காண்பிக்க உள்ளனர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் செய்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில், இன்று(பிப்.,7) தெப்பத்திருவிழா நடப்பதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணி முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பில் இருந்து தெப்பக்குளம் நோக்கி வாகனம் செல்ல அனுமதியில்லை. காமராஜர் ரோடு வழியாக ராமநாதபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், குருவிக்காரன் சாலை, ஆவின் சந்திப்பு, சிவகங்கை ரிங் ரோடு வழியாக செல்ல வேண்டும். இவ்வழியேதான் ராமநாதபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் வரவேண்டும். விரகனூர், ஐராவதநல்லூரில் இருந்து தெப்பக்குளம் நோக்கி வாகனங்கள் வரக்கூடாது. தெப்பத்திருவிழாவிற்கு வருபவர்கள், கார்களை வைகை தென்கரை ரோட்டிலும், டூவீலர்களை நியூ பங்கஜம் காலனி, தியாகராஜர் காலனி, வெங்கடபதி அய்யங்கார் சந்திலும் நிறுத்த வேண்டும். விரகனூர் பகுதியில் இருந்து வருபவர்கள், ஐராவதநல்லூரில் நிறுத்த வேண்டும். காமராஜர் ரோடு, தெப்பக்குளத்தைச் சுற்றி "பார்க்கிங் செய்யக்கூடாது. அண்ணாநகர் பாலத்தில் மாலை 3 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. வெளிநாட்டு பயணிகள் பங்கேற்பு: தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் இன்று காலை 10.35 மணிக்கு அம்மனும், சுவாமியும் எழுந்தருளி காலை இரு முறை, இரவு 8 மணிக்கு ஒரு முறை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வருகின்றனர்.மாலை 5 மணிக்கு மைய மண்டபத்தில் பத்தியுலாத்துதல், இரவு 10 மணிக்கு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும் எழுந்தருளுகின்றனர். மாலையில் தெப்பக்குளத்தில் நடக்கும் நிகழ்ச்சியை பார்வையிட ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 150 பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை டிராவல் கிளப் செய்துள்ளது. அதன் செயலாளர் முஸ்தபா, ""வெளிநாட்டு பயணிகள் திருவிழாவை இடையூறுகளின்றி பார்க்க, தியாகராஜர் கல்லூரியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.